2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் – திமுகவுடன் இன்று கூட்டணியை உறுதி செய்துள்ளது. எங்கள் கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் விருப்பம் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் எங்கள் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பிய இந்தக் கூட்டணி, கேப்டன் இல்லாத இந்த நேரத்தில் அமைந்திருக்கிறது. 2016-ல் இந்தக் கூட்டணி அமைய வேண்டியது. கலைஞர் ஐயா ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்றார். ஆனால் பத்து வருஷம் கழித்து தாமதமாக இன்று இந்தக் கூட்டணி உறுதியாகியுள்ளது.
எத்தனை இடங்கள், எந்தத் தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பது எல்லாம் இதற்குப் பிறகு குழு அமைத்து தேமுதிக, திமுக இரு கட்சிகளும் இணைந்து பேசி முடிவு செய்து, முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அதை அறிவிப்பார். திமுகவுடன் நாங்கள் கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம் என்ற செய்தியை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவுடன் தேமுதிக முதல் முறையாக கூட்டணி அமைத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களும், இரு கழகத்தைச் சேர்ந்தவர்களும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு இந்தக் கூட்டணியை வரவேற்கிறார்கள். அதனால் இந்தக் கூட்டணி 200+ இடங்களில் அமோக வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியாகச் சொல்கிறேன்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்துள்ளது. இன்று உங்கள் கூட்டணி அமைந்துள்ளது. ராஜ்யசபா கொடுக்க திமுக ஒத்துக்கொண்டதா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதுகுறித்து உரிய நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பார். நாங்கள் இன்று கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம். நான் சொன்னதுபோல் குழு அமைத்து எந்தத் தொகுதிகள் என்பது எல்லாம் பேசித் தலைமையில் இருக்கும் ஸ்டாலின் அதை அறிவிக்க வேண்டும்” என்றார்.
அதிமுக கூட்டணிக்குச் சென்றதாகக் கூடத் தகவல் வெளியாகியிருந்தது. அப்படியிருக்கையில் திமுக கூட்டணிக்கு ஒரு அடிப்படை என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பத்திரிகையாளர்களும் யூடியூபர்களும் தான் தவறான ஒரு செய்தியைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருந்தீர்கள். பல முறை நான் அதற்கு விளக்கம் கொடுத்தும் டிஆர்பிக்காக நீங்கள் தொடர்ந்து தவறான செய்தியைப் போட்டுக்கொண்டே இருந்தீர்கள். ஆனால் இன்று இந்தக் கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
