திமுகவா? அதிமுகவா? – பிரேமலதா நடத்தும் பேரம்! சீனியர்கள் விலகல்!

Published On:

| By vanangamudi

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரியில் நடைபெற்றது. premalatha bargain with dmk and aiadmk

இந்தப் பொதுக்குழுவில் மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா, பொருளாளராக எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி, துணை பொதுச்செயலாளர்களாக செந்தில் குமார், ஆத்தூர் சுபா, சந்திரன், வழக்கறிஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பிக்கு உயர்மட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல, துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ செங்கல்பட்டு அனகை முருகேசனுக்கும் உயர்மட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தியில் இருந்த இருவரும் பொதுக்குழு முடிந்த பிறகு, கட்சி தலைமையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து சில மூத்த நிர்வாகிகளும் ராஜினாமா கடிதம் கொடுக்க தயாராகி வருவதாக சொல்கிறார்கள். இதைப்பற்றி விஜயகாந்துடன் அரசியல் பயணம் செய்த சிலரிடம் பேசினோம்…

“அனகை முருகேசன் 2005 செப்டம்பர் 15-ஆம் தேதி கட்சி துவங்கியபோது, விஜயகாந்த் முதல்வராகும் வரை காலணி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்தார். பொதுக்குழுவுக்கு வந்தபோது கூட காலணி அணியாமல் தான் வந்தார். premalatha bargain with dmk and aiadmk

ADVERTISEMENT

அதேபோல, நல்லதம்பி ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் சைக்கிள் கடை வைத்துக்கொண்டு மன்றத்திற்கும் கட்சிக்கும் சென்னைக்கு வரும் நிர்வாகிகளுக்கும் செலவு செய்து கட்சியை வளர்த்தவர்.

முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி சிவக்கொழுந்து டீக்கடை வைத்துக்கொண்டு மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தை வளர்த்து கட்சியை பலப்படுத்தியவர். பல நெருக்கடியான காலகட்டத்திலும் கட்சியை விட்டு வெளியேறாமல் நம்பிக்கையாக இருந்தவர்.

தேமுதிக கட்சி துவங்கியதில் இருந்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் மாநாட்டிற்கும் பணம் செலவழித்து ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி செல்வாக்கை நிலைநாட்டியவர்.

இப்படிப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் ஜூனியர்களுக்கு பதவி கொடுத்தது கட்சிக்குள்ளேயே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் ஒவ்வொரு சீனியர்களும் வெளியேறுகின்றனர்” என்கிறார்கள்.

தேமுதிக தலைமைக்கு சீனியர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது ஒருபக்கம் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், மற்றொரு பக்கம் கூட்டணி அமைப்பதிலும் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது என்கிறார்கள்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய சில தேமுதிக நிர்வாகிகள், “2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுக தலைமை உறுதிக்கொடுத்தது. ஆனால், இப்போது ராஜ்யசபா சீட் எதிர்பார்க்க வேண்டாம். 2026-க்கு பிறகு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக சொல்வது தேமுதிகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பொருளாளர் எல்.கே.சுதீஷை மாநிலங்களவைக்கு எப்படியாவது அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று பிரேமலதா தீவிர முயற்சி செய்து வருகிறார். மேலும், இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் தேமுதிகவுக்கு 30 சீட் கேட்டுள்ளார்.

திமுக தலைமையில் இருந்தும் பிரேமலதாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எம்.எல்.ஏ சீட் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, தற்போதைக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று திமுகவிடம் பிரேமலதா டிமாண்ட் செய்து வருகிறார். ஆனால், திமுக தலைமை எந்தவிதமான உத்தரவும் கொடுக்கவில்லை. அதனால் திமுக, அதிமுக என்று இருதரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்கிறார்கள். premalatha bargain with dmk and aiadmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share