விபத்தை ஏற்படுத்திய வருமானவரித் துறை கார்?: கர்ப்பிணி பலி!

Published On:

| By Balaji

சென்னை வில்லிவாக்கத்தில் வருமானவரித் துறை போர்டு இருந்த கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்தவர் கௌஷீப் (28). நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள கௌஷீப் வழக்கம்போல் நேற்று மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றுவிட்டு, ஸ்கேன் ரிப்போர்ட்டை துணிக்கடைக்குச் சென்று கணவரிடம் காண்பித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த வருமானவரித் துறை போர்டு பொருத்திய கார் ஒன்று, கர்ப்பிணியின் பின்னால் பலமாக மோதியிருக்கிறது.

இதில் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்ட கௌஷீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீஸார், கர்ப்பிணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய காரில் வருமானவரித் துறை போர்டு உள்ள நிலையில், அது மத்திய அரசின் வாகனமா என்று விசாரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர். குழந்தை குறித்த கனவுகளோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த கர்ப்பிணி விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

**பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share