கிச்சன் கீர்த்தனா: இறால் கீரை அடை!

Published On:

| By Kavi

Prawn and spinach Adai Recipe

டிசம்பர், ஜனவரி மாதங்களே இறால் சீசன். அசைவ உணவுகளில் அத்தனை வகைகள் இருந்தாலும்கூட இறாலுக்கென்று தனிச்சுவை உண்டு. சுவை மட்டுமல்ல… சத்துகளும் இறாலில் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, இறாலில் காணப்படும் கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ரால் வகையைச் சேர்ந்தது என்பதால் அனைவருக்கும் ஏற்றது. இந்த இறால் கீரை அடை சுவையான சிற்றுண்டியாக மட்டுமல்ல… ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் அமையும்.

என்ன தேவை?

கடலைப்பருப்பு – கால் கப்
பயத்தம்பருப்பு – கால் கப்
துவரம்பருப்பு – கால் கப்
மைசூர் பருப்பு (Masoor dal) – கால் கப்
அரிசி மாவு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/3 கப்
இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவவும்)
இறால் – 250 கிராம்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கீரை இலைகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பருப்புகளை காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துக் கழுவி, நீரில் ஊறவைத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். தேங்காய், இறால், இஞ்சியைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசி மாவுடன், கீரை, கொத்தமல்லி இலை, அரைத்த பருப்பு கலவை, இறால் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதை அடை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசை தவாவைச் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய்விட்டு தோசை போல இருபுறமும் சுட்டெடுக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் செய்யவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பால் சேர்த்த… பால் சேர்க்காத காபி, டீ… உங்களுக்கு எது பிடிக்கும்?

கிச்சன் கீர்த்தனா: கீரை கட்லெட்

இதெல்லாம் காதுகள் தாங்காதுப்பா : அப்டேட் குமாரு

விமர்சனம் : பராரி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share