முதல்வர் விஜய் முன்னிலையில் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி (Pravin Chakravarty) வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அதிமுக எம்.பி. சிவி சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து அவர் தமது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் தமிழகத்தில் 1 ராஜ்யசபா இடம் காலியானது. இந்த இடத்துக்கு ஜூன் 18-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தவெகவுக்கு 1 எம்.பி. பதவி எளிதாக கிடைக்கும். ஆனால் நாடாளுமன்றத்தில் தவெக முதல் முறையாக நுழைய கிடைத்த இந்த வாய்ப்பை காங்கிரஸுக்கு தாரை வார்த்தது.

காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி பதவிக்கான இடைத் தேர்தல் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் முன்னிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அமைச்சர்களுடன் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தி, தவெக, சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் கூட்டணியின் வேட்பாளர் தாம் என அறிவித்தார். ஆனால் இதற்கு சிபிஐ, சிபிஎம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிபிஐ, சிபிஎம்-மைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவு தருவதாக அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் விசிகவின் அமைச்சர் வன்னி அரசு, முஸ்லிம் லீக் கட்சியின் அமைச்சர் ஷாஜஹான் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்பு மனுவை முன்மொழிந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேரில் ஆதரவு கேட்ட பிரவீன் சக்கரவர்த்தி


இதனிடையே வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு கோரினார் பிரவீன் சக்கரவர்த்தி.
