”விளம்பர அரசியல் தேவையில்லை” என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ‘2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023ஆம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகப் பேரவையின் தலைவர் பாலு, எம்.எல்.ஏ. சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் எழுச்சிப் பேருரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “2023ஆம் ஆண்டு நமக்கு மிகமிக முக்கியமான ஆண்டு. தேர்தல் பணிகளுக்கு நாம் தயாராக வேண்டிய ஆண்டு. அதற்கேற்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நம்முடைய செயல் திட்டங்களை இந்த ஆண்டில் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அதற்கான செயல் தலைவர்களே நீங்கள்தான்.
உங்களைப்போன்ற செயல் தலைவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் கிடையாது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில், ஆய்வு ஒன்றை நடத்தினார். அதில், பாமகவில்தான் அதிக இளைஞர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. நம்முடைய வேகமான, விவேகமான இளைஞர்கள் எதையும் யோசிக்காமல் செய்துவிடக்கூடியவர்கள்.
அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கையில்தான் பாமக இன்று தமிழகத்தில் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் கட்சியே உண்மையான வளர்ச்சியைக் கொண்டது. நாம் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், மக்களுக்கு எத்தனையோ சாதனைகளைப் படைத்து இருக்கிறோம்.
தமிழகத்தில் பாமக இல்லையென்றால், தமிழக மக்களுக்கு சமச்சீர் கல்வி கிடைத்திருக்காது. சமூக நீதியே கிடைத்திருக்காது. 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்திருக்காது. இப்படி எத்தனையோ வரலாறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது இந்திய அளவிலும் பலவற்றைச் செய்திருக்கிறது. பாமக இல்லையென்றால், இன்று 108 ஆம்புலன்ஸ் வசதியே இருந்திருக்காது. இதுதான் கட்சியின் உண்மையான வெற்றி.

இந்த வளர்ச்சி அரசியலை நோக்கித்தான் நாம் செல்கிறோம். ’அய்யா (ராமதாஸ்) வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் செய்து முடித்து விடுகிறாரே. அப்படியென்றால் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்களா’ என ஊடகங்கள் நிறைய கருத்துகளைச் சொல்கின்றன. அது, நம்முடைய நோக்கமல்ல. நம் நோக்கமே தமிழகத்தின் வளர்ச்சிதான். ’அன்புமணியை முதல்வர் ஆக்குவதுதான் இலக்கு’ என இங்கு சிலர் பேசினர்.
ஆனால், அது இலக்கல்ல. நம் இலக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி. வேகமாய் செல்வதற்கு நாம் ஆட்சி செய்ய வேண்டும். இன்றும் நாம் இலக்கை அடையாமலேயே ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். அது, மதுவிலக்கு, புகை, ஆன்லைன் ரம்மி, சுற்றுச்சூழல் என அனைத்திலும் முதன்மையாக இருப்பது பாமகதான்.
இன்றைய அரசியல் சூழலும் களமும் நமக்கேற்ப இருக்கிறது. தமிழகத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் கலைந்து, உடைந்து, பிரிந்து, தேய்ந்து நிற்கின்றன. ஆனால் பாமக மட்டும்தான் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்து வருகிறார்கள். சில கட்சிகளிடமிருந்து வெறும் சத்தம்தான் வருகிறது. உள்ளே ஒன்றும் கிடையாது. அது, எந்தக் கட்சி என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் செய்யும் விளம்பரம் நமக்கு வரவும் வராது. அது நமக்கு தேவையுமில்லை. நமக்கு தெரிந்த ஒரே அரசியல் டீசன்ட் அண்டு டெவலெப்மென்ட் அரசியல். நமக்கு அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. உறுதியாக இருங்கள்” என்றார்.
ஜெ.பிரகாஷ்