தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோரும் பீகாரில் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் கேரளாவில் (செப்டம்பர் 29) நிறைவு செய்தார்.
இதையடுத்து, இன்று (அக்டோபர் 3) கர்நாடகாவில் 26வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல், மொத்தம் 150 நாட்கள், 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் இந்த நடைப்பயணத்தை நிறைவுசெய்ய இருக்கிறார்.
புது முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர்
ராகுலின் நடைப்பயணம் குறித்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி பேசிய தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், “இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத்திலோ அல்லது வேறு ஏதேனும் பாஜக ஆளும் மாநிலத்திலோ தொடங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், ”ஆறு முதல்வர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவிய பிறகும் நல்லாட்சி இருப்பதாக என்னால் கூற முடியவில்லை. அதனால் களத்தைவிட்டு வெளியேறினேன்.

எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் இனி நான் பணியாற்ற மாட்டேன். பீகாரில், நடைமுறையில் உள்ள அமைப்பு முறையை மாற்றத் திட்டமிடுகிறேன். இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றப் போவதில்லை. பீகாரில் தாமும் 3,500 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டிக்கு முன்பாக, அதாவது கடந்த செப்டம்பர் 14ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பானது 45 நிமிடங்கள் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் நிதீஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு இந்திய அரசியல் களத்தில் கவனத்தை பெற்றது.
எனினும் இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. வழக்கமான சந்திப்பு மட்டுமே என நிதிஷ்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே, பிரசாந்த் கிஷோர், தன்னுடைய முடிவை மாற்றி, இனி அரசியல் கட்சிகளுக்கு பணியாற்றப் போவதில்லை என்றதுடன், பாதயாத்திரையையும் கையிலெடுத்துள்ளார்.

அதன்படி, பிரசாந்த் கிஷோர் ’ஜன் சுரஜ்’ என்ற பாதயாத்திரையை காந்தி பிறந்த தினமான நேற்று (அக்டோபர் 2), பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தொடங்கியுள்ளார். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போரின்போது, காந்திஜி தனது முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தை 1917ம் ஆண்டு இம்மாவட்டத்திலிருந்துதான் தொடங்கினார்.
பிரசாந்த் மேற்கொள்ள இருக்கும் இந்த பாதயாத்திரையில் 3,500 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடக்க உள்ளார். பீகார் மாநிலத்தின் பல நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்று மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள உள்ளார் கிஷோர். இந்த நடைப்பயண நிறைவுக்குப் பிறகு அவர், பீகாரில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார்.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
இந்திய அரசியல் வரலாற்றில் டிஜிட்டல் யுகத்தின் தேர்தல் வியூகராக அடையாளம் காணப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சுருக்கமாக எல்லோராலும் ’பி.கே.’ என அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் பணியாற்றிவந்தார், கிஷோர்.
பின்னாளில் அரசியல் ஆசை இவருக்குள்ளும் துளிர்விடவே, குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைச் சந்தித்து, வெளிநாடுகளில் தேர்தல் யுக்திக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் பணிகளைப் பற்றி மோடிக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்போது மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நேரம்.
ஆனால், அதற்கு முன்பாகவே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர், பிரசாந்த். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றைக் கட்டினார், ராகுல். அந்த மருத்துமனைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மருத்துவமனைச் செயல்பாட்டைப் பார்த்துக்கொள்ளவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார் கிஷோர்.

மோடியைச் சந்தித்த கிஷோர்
அந்த சமயத்தில் ராகுலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மோடியைச் சந்தித்தார், கிஷோர். அப்போது மோடியின் உடை முதல் அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டவர்தான் இந்த கிஷோர். அதன் பயன், எங்கும் மோடி அலை வீசத் தொடங்கியதுடன், மோடியும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், அதற்குப் பிறகு பாஜகவுக்கும் கிஷோருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து நகர்ந்தார், கிஷார்.
பின்னர்தான் ‘ஐ-பேக்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் அரசியல் கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்து கொடுத்த வழியில் பீகாரில் நிதிஷ்குமார் முதல்வரானார். அந்தச் சமயத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் பதவியையும் பெற்றார் கிஷோர். பின்னர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்த கிஷோருக்கு தோல்வியே மிஞ்சியது. காரணம், அந்தத் தேர்தலில் பாஜகவே வென்றது. அதுபோல், உத்தரப்பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ்-அகிலேஷ் கூட்டணிக்காக அகிலேஷின் அழைப்பின்பேரில் உழைத்த அவர், தோல்வியைச் சந்தித்தார். ஆனாலும் பாஜக வெற்றிபெற்றதால், கிஷோர் பெயர் வெளியில் தெரியவில்லை.

தமிழகத்திலும் ஐ-பேக் நிறுவனம்!
அதற்குப் பிறகு பஞ்சாப்பில் காங்கிரஸின் அம்ரீந்தர் சிங்கிற்காகப் (தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார்) பணியாற்றினார், கிஷோர். அதில் அம்ரீந்தரை வெற்றிபெற வைத்ததால், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்காகப் பணியாற்றலாம் என நம்பிக்கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
என்றாலும், அதற்கு முன்பே ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தஞ்சமடைந்தார், கிஷோர். அதற்காக ஒரு பெரும் தொகையும் பெற்று ஒப்பந்தமானார். ஆந்திராவில் ஜெகனை அரியணையில் அமரவைத்த கிஷோர், அதன்பிறகு சென்றது மேற்கு வங்கத்துக்கு.
அங்கும், அவருடைய ஐபேக் நிறுவனம் வெற்றிவாகை சூடியது. அடுத்து, தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்தார், கிஷோர். அரவிந்த் கெஜ்ரிவாலை 3வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமரவைத்ததில் கிஷோரின் பங்கும் அதிகம்.
இப்படி, மாநிலங்கள் பலவற்றிலும் ’ஐ-பேக்’ வெற்றிக் கொடிகள் பறந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் திமுகவும் பிரசாந்த் கிஷோரைப் பயன்படுத்திக் கொண்டது. 2021ல் தமிழகத்திலும் வெற்றியைப் பதித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமரவைத்த பிறகு, அகில இந்திய காங்கிரஸை நாடினார் பிரசாந்த் கிஷோர்.

பாதயாத்திரையைத் தொடங்கிய கிஷோர்
ஆனால், காங்கிரஸ் மீண்டும் கிஷோரைக் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து, சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த நிதிஷை நாடினார். அவரும் சிக்னல் அளிக்காததாலேயே தற்போது பாதயாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். பிரசாந்த் கிஷோர்.
பாதயாத்திரை குறித்து பிரசாந்த் தனது ட்விட்டர் தளத்தில், ”மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின், பாதயாத்திரை குறித்து அரசியல் கட்சிகள் பெரிதாக வாய் திறக்கவில்லை என்றபோதும், பீகார் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங், “இந்த யாத்திரை மூலம் பிரசாந்த் கிஷோர் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் பாதயாத்திரைக்கு பாஜகதான் அரசியல் வியூகம் வகுத்துகொடுத்திருக்கிறது. அவர்கள்தான் நிதியும் செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே பாதயாத்திரைக்கான நிதி குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் பீகார் நடைப்பயணம் எந்த அளவுக்கு பயன் தரப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெ.பிரகாஷ்
உளவுத்துறை ஐஜி கடைக்குட்டி சிங்கம்: யார் இந்த செந்தில்வேலன் ஐபிஎஸ்?