சென்னை மாமல்லபுரத்தில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் இன்று (பிப்ரவரி 25) சென்னை வந்தடைந்தார். Prashant Kishor attend TVK
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் தொடங்கினார்.
கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நாளை நடைபெறுகிறது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், 95 மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 600 பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் இன்று சென்னை வந்தடைந்தார்.
பிரசாந்த் கிஷோர், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது தவெகவின் சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில், பிரசாந்த் கிஷோர் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Prashant Kishor attend TVK