மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati) தலைவரான நவ்னீத் குமார் செகல் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த நிலையில் நவ்னீத் குமார் செகலின் ராஜினாமா பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒளிபரப்பு நிறுவனம்தான் பிரசார் பாரதி. இது தன்னாட்சி அமைப்பு. மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ வானொலி ஆகியவற்றை பிரசார் பாரதி நிர்வகிக்கிறது.
பிரசார் பாரதியின் தலைவராக இருந்த சூர்ய பிரகாஷ் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அவரது ஓய்வுக்குப் பின்னர் 4 ஆண்டுகள் பிரசார் பாரதி நிறுவனத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் நவ்னீத் குமார் செகல், பிரசார் பாரதியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்பதவியில் 9 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் நவ்னீத் குமார் செகல் தமது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது.
யார் இந்த நவ்னீத் குமார் செகல்?
- 1988-ம் ஆண்டு உ.பி. மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நவ்னீத் குமார் செகல், அம்மாநில அரசில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
- உ.பி. முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பதவி வகித்த போது நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தார்; சமாஜ்வாதி, பாஜக ஆட்சிக் காலங்களிலும் நவ்னீத் குமார் செகல், செல்வாக்குமிக்க அதிகாரியாகவே இருந்தார்.
- 2023-ம் ஆண்டு உ.பி. மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி வகித்த நிலையில் ஓய்வு பெற்றார்.
- 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்து டிசம்பர் 2-ந் தேதி நவ்னீத் குமார் செகல் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரசார் பாரதியின் சர்ச்சைகள்
- பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியை மத்திய அரசு காவிமயமாக்கி வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
- பிரசார் பாரதியின் ‘தூர்தர்ஷன்’ டிவி சேனல் லோகோ, காவி மயமாக்கப்பட்டது கடும் எதிர்ப்புக்குள்ளானது
- சென்னையில் உள்ள பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, “தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் தவிர்க்கப்பட்டது மிகப் பெரும் சர்ச்சையானது. தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’ என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார். இதனையடுத்து பிரசார் பாரதியின் டிவி சேனலான டிடி தமிழ் – தூர்தர்ஷன் தமிழ் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
