பிரதமர் திட்டத்தில் பிரசாந்த் கிஷோர்

Published On:

| By Balaji

கழக அரசியல் முதல் கார்ப்பரேட் அரசியல் வரை மினி தொடர் 20

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுகவுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துகொண்டு பணிகளைத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் களப் பணிகளை செய்த அனுபவம் மிக்க, அதே அளவுகோலோடு தமிழக தேர்தல் களத்தையும் அளக்கமாட்டார். காரணம் ஆந்திராவும் தமிழகமும் அருகருகே இருந்தாலும் அரசியல் களத்தில் பல வேற்றுமைகளையும் சில ஒற்றுமைகளையும் கொண்டுள்ளன.

மேலும் பிரசாந்த் கிஷோர் பணியாற்றும் மாநிலக் கட்சிகளிலேயே மிக மூத்த கட்சி திமுகதான். சில நாட்களாகவே திமுகவின் கடந்த கால தேர்தல் வெற்றி விவரங்களையெல்லாம் பட்டியலிட்டு ஆய்வு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் ஐபேக் குழுவினர்.

ADVERTISEMENT

திமுகவுக்கு இப்போதைய இலக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தம்பி அனில் ரெட்டி திமுக தலைவர் ஸ்டாலினிடமே, ‘ஆந்திராவில் எங்களை ஒழித்துக் கட்ட முயன்றதுபோல தமிழகத்தில் திமுகவை ஒழித்துக் கட்ட பாஜக-அதிமுக பெரும் தீவிரத்தில் இருக்கிறது. எனவே வருகிற தேர்தல்தான் திமுகவுக்கான கடைசி வாய்ப்பு. இதில் திமுக சிறு அலட்சியம் காட்டிவிட்டால் கூட அது வரலாற்றுப்பிழையாக மாறிவிடும். எனவே திமுக எல்லா கூறுகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகவே பிரசாந்த் கிஷோரோடு நீங்கள் இணையலாம்’ என்று கூறியிருந்தார்.

அடுத்து திமுக ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பையும் ஏன் அலட்சியப்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் சிந்தித்துதான் அனில் ரெட்டியின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவெடுத்தார் ஸ்டாலின்.

ADVERTISEMENT

அதுவும் திமுக இப்போது மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிற நிலையிலும்… ஆட்சியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றைக் கூட நாம் தவறவிட்டுவிட்டோம் என்று ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடே பிகேவுடன் ஒப்பந்தம் போட்டார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு இலக்கு முதல்வராக வேண்டும். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் இலக்கு பாஜகவின் கண்மூடித் தனமான எதிர்ப்பை மீறி மீண்டும் முதல்வராக வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த இலக்கு, ’பாஜக அரசின் பல தடைகளை மீறி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய வரலாற்றுச் சாதனையை தொடர வேண்டும்’ என்பதுதான். பிரசாந்த் கிஷோரோடு சேர்ந்து ஏற்கனவே முதல்வராகிவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி.

ADVERTISEMENT

ஆக இப்போது பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் ஒரு முதல்வரை உருவாக்கிவிட்டார். தமிழ்நாட்டில் ஸ்டாலினை முதல்வராக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேற்கு வங்காளத்தில் மீண்டும் மம்தாவை முதல்வராகவும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராகவும் ஆக்குவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகார் முதல்வருமான நித்தீஷ் குமாரும் பிகேவுக்கு பக்க பலமாக இருக்கிறார்.

இத்தனை முதல்வர்களை உருவாக்கும் பிரசாந்த் கிஷோர் இதை முழுக்க முழுக்க தொழிலாகவேதான் செய்து வருகிறார் என்பதுதான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது. முதலில் இதை ஒரு தொழிலாகத்தான் ஆரம்பித்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால் இப்போது பிகேவும் தனக்கு ஒரு இலக்கை நிர்ணயித்து வைத்துவிட்டார்.

ஆம்.. சாணக்கியராக இருந்து சந்திரகுப்தராக மாறுவதுதான் அவரது இலக்கு.

இப்போது வரை, திரைக்கு பின்னால் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றும் பிகே, அண்மை நாட்களில் சிஏபி, என்பிஆர், என்..ஆர்.சி. விவகாரங்களில் பகிரங்கமாக குரல் கொடுத்து வருகிறார். இதை அவர் இந்தியன் ஐபேக் நிறுவனத்தின் தலைவராக இருந்து கொடுக்கவில்லை என்றாலும், ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருந்து குரல் கொடுக்கிறார். ஏற்கனவே அவர் அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்குள் பிரசாந்த் கிஷோர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளார். இப்போது அவரது நோக்கம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கருத்துகளை அழுத்தமாக முன் வைத்து தனக்கான தேசிய கவனத்தைப் பெறுவது. படிப்படியாக இதன் மூலம் அவர் அடைய நினைப்பது அதிர்ச்சி அடையாதீர்கள் பிரதமர் பதவியைத்தான்.

ஏற்கனவே தான் உருவாக்கிய முதல்வர்கள், இப்போது உருவாக்க இருக்கும் முதல்வர்கள் மூலம் அடுத்த தேர்தலில் பிரதமர் ஆவதே பிரசாந்த் கிஷோரின் இலக்கு.

பிரசாந்த் கிஷோருக்கு பிரதமர் பதவி என்பது ஆசையோ, கனவோ இல்லை. அது அவரது திட்டம். 2014 இல் மோடி என்ற பிரதமரை உருவாக்கிய போது, மாநிலங்களில் முதல்வர்களை உருவாக்கும்போது தன்னையே தான் பிரதமராக உருவாக்க முடியாதா என்ற பிகேவின் திட்டம் இந்திய அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்!

தொகுப்பு: ஆரா

[ஆந்திரா-தமிழ்நாடு: பிகேவின் பிரச்சாரப் பொறியியல்](https://minnambalam.com/politics/2019/12/26/26/prasanth-kishore-workout-andhara-and-tamilnadu-for-dmk)

(கார்ப்பரேட் அரசியல் மினி தொடர் நிறைவடைகிறது)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share