ராஜினாமாவுக்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது : பிரகாஷ்ராஜ்

Published On:

| By Balaji

என் ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்குத் திரையுலக நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தலில் மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜுக்கு எதிராக அவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது .

ADVERTISEMENT

தமிழகத்தை தவிர கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநில திரைப்பட துறையில் பிற மாநிலத்தவர்கள் நடிக்கலாம், பணிபுரியலாம் அதற்கு எந்த தடையும் இடையூறும் இருக்காது. ஆனால் அந்த மாநில சினிமா சங்கங்களின் தலைமைப் பொறுப்புக்கு பிறமொழியை தாய் மொழியாக கொண்டவர்களை அனுமதிப்பது இல்லை.

கலைக்கு மொழியில்லை என்று பேசுவார்கள். ஆனால் சங்கம் என்று வருகிறபோது மொழி முன்வந்து நிற்கிறது. நடிகராக தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கு படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறார், பெருமை சேர்த்திருக்கிறார்.

ADVERTISEMENT

அதனால், தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் மொழியுணர்வையும், இன உணர்வையும் தேர்தலில் பிரதான பிரச்சாரமாக முன்வைத்தனர் எதிர் அணியினர். தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார்.

அதனால் தன்னை அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

தற்போது தனது அணிக்கு ஆதரவாக வாக்களித்த நடிகர்களுக்காக பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

என் பக்கம் நின்ற என் அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களே. எனது ராஜினாமாவுக்குப் பின் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது. நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் பொறுப்பு என்பதை எங்கள் அணி உணர்ந்திருக்கிறோம். உங்களை நாங்கள் என்றும் கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம். எங்களை நினைத்து நீங்கள் பெருமையடைவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

**- அம்பலவாணன்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share