பாஜகவுக்கு எதிரான அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். Prakash Karat against bjp
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு நேற்று (ஏப்ரல் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் பிரகாஷ் காரத் பேசும்போது, “இந்த தருணத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, சங்கரய்யா, கே.பி.ஜானகி அம்மாள் ஆகிய அனைவரையும் வணங்குகிறேன்.

மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை நினைவு கூர்கிறேன். மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை நான் முன்வைக்கிறேன். டொனால்ட் டிரம்பின் நண்பர் என்று சொல்லிக்கொள்பவர் யார்? முகேஷ் அம்பானி, கெளதம் அதானியின் நண்பர் யார்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு விசுவாசமாக இருப்பவர் யார்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் தான். அது நரேந்திர மோடி மற்றும் பாஜக. பிரதமர் மோடியும் மத்திய அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கும் இந்துத்துவா கார்ப்பரேட் உறவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே, பாஜக அரசை நாம் வீழ்த்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், பாஜகவை எப்படி கடுமையாக எதிர்ப்பது என்ற கேள்வி நம் முன் எழுகிறது. கருத்தியல், கலாச்சாரம், சமூகத்துறைகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் மக்களின் தனி மனித சுதந்திரத்திலும், அரசியலமைப்பின் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.
புதிய தாராளமயக் கொள்கைக்கு எதிராகவும், எளிய மக்களுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடுவதால், நிறைய பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். இந்த தருணத்தில் பாஜகவுக்கு எதிரான அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தவித சமரசமுமில்லாமல் வகுப்புவாத ஆர்எஸ்எஸ் பாஜக அரசை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அஜண்டாவின் வழியில் செயல்படுகிறார்கள். சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் தான் பாசிச பாஜக அரசின் முக்கியமான டார்கெட். பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் சமுதாய மக்கள் மீது வகுப்புவாத அமைப்புகள் கலவரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மத்திய பாஜக அரசு ஒரு முதலாளித்துவ அரசாக செயல்படுகிறது. இதனால் நாட்டில் மிகவும் பணக்காரர்களான 1 சதவிகித மக்களிடம் இந்தியாவின் 40 சதவித சொத்துக்கள் இருக்கிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் முனைப்பு அரசியலமைப்பின் மீதான நேரடி தாக்குதலாகும். பிஎம்எல்ஏ, உபா சட்டங்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஏவப்படுகின்றன. இரண்டு மாநில முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தலித், பெண்கள், பழங்குடியினர், ஆதிவாசிகள் மீது இந்துத்துவா வகுப்புவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். கேரளாவில் எல்டிஎஃப் அரசு மக்கள் விரோத சட்டங்களை கடுமையாக எதிர்க்கிறது. அதற்கான மாற்று சட்டங்களை அமல்படுத்துகிறார்கள்.
இந்த மாநாட்டின் வாயிலாக பாலஸ்தீன மக்களுக்கு எங்களது முழு ஆதரவை வழங்குகிறோம். இஸ்ரேல் நாட்டிற்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கும் மோடி அரசிற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார். Prakash Karat against bjp
