பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: மோடிக்கு சித்தராமையா கடிதம்!

Published On:

| By indhu

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (மே 1) கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யான அவர், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் மீண்டும் களமிறங்கினார்.

ஏப்ரல் 26-ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகின.

ஹாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய பென்-டிரைவ்,வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் பாலியல் தொந்தரவு செய்ததாக 25 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், ஹாசன் போலீஸார் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, தேவகவுடாவின் மூத்த மகனும், பிரஜ்வலின் தந்தையுமான எம்எல்ஏ ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்த 48 வயது பெண், ஹொளேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலுக்கும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். அதன்பேரில், ரேவண்ணா, பிரஜ்வல் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் ஹாசனில் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பியோடியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் உடனடியாக நாடு திரும்புமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “ஹாசன் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் வழக்கை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரிப்பதற்காக எஸ்ஐடி 24 மணி நேரமும் உழைத்து வரும் நிலையில், அவர் நாடு திரும்புவது மிகவும் முக்கியமானது.

இது சம்பந்தமாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கும், இந்திய அரசின் டிப்ளோமேட்டிக் மற்றும் காவல்துறையை பயன்படுத்தி இதுபோன்ற பிற நடவடிக்கைகளை எடுக்கவும், வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்ளும் வகையில், தலைமறைவான நாடாளுமன்ற உறுப்பினரான பிரஜ்வல் விரைவாக நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“நடராஜனுக்கு டி20 உலககோப்பையில் இடமில்லையா?” – சரத்குமார் கேள்வி!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு : உச்ச நீதிமன்றத்தில் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share