பல மாதங்களாகக் காணாமல்போயிருந்த பிரபுதேவா வந்துவிட்டார். சிங் ஈஸ் ப்ளிங் 2015ல் படுதோல்வியைத் தழுவியபின் அமைதியாக இருந்த பிரபுதேவா, 2016ல் நான்கு படங்களுடன் வந்திருக்கிறார். அப்படி என்ன சிறப்பு?
பிரியதர்ஷன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘சிலசமயங்களில்’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார். சமூகக் கருத்துகொண்ட இத்திரைப்படம், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வைப்பற்றி பேசுகிறது. முதலில் அமீர்கான் தயாரிப்பதாக இருந்த இத்திரைப்படம், பிறகு கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிரியதர்ஷனிடம் இப்படி ஒரு கதையை அறிந்த பிரபுதேவாவும், அமலாபாலும் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். பிரபுதேவாவும் அமலாபாலும் எப்படி ஒன்றுசேர்ந்தனர்?
பிரபுதேவா தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா, வில்லனாக சோனு சூட் என எல்லா திரையுலகத்திலும் மவுசு இருக்கும் நடிகர்களுடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்துக்கு இந்தியில் ‘அபிநெட்ரி’ என்று பெயரிட்டிருந்தனர். தமிழில் ‘காந்தா’ என்றும், தெலுங்கில் ‘பாதாள பைரவி’ என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பெயர்களும் இரு திரையுலகிலும் மறக்கமுடியாத இடத்தைப் பெற்றவை. காந்தா என எம்.ஆர்.ராதா பேசிய வசனமும், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற பாதாள பைரவி திரைப்படமும் மிகப்பிரபலம் என்பதால், படத்தின் புரமோஷன் எளிது என்பதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, பிரபுதேவா தயாரிப்பில் உருவாகிவரும் ‘போகன்’, ‘வினோதன்’ ஆகிய இரு திரைப்படங்கள். தமிழ் சினிமாவில் எத்தனைமுறை பார்த்துவிட்டாலும் அலுத்துப்போகாத ஜோடி ஜெயம் ரவி-ஹன்ஸிகா ஆகியோர் இணைந்திருக்கும் போகன் திரைப்படம் மற்றும் வருண், வேதிகா சலோனி லுத்ரா ஆகியோர் நடிப்பில் விக்டர் ஜெயராஜ் இயக்கும் வினோதன் திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.