ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த நபரை பிரபாஸ் ரசிகர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு ஆதிபுருஷ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 16) திரையரங்குகளில் வெளியானது.

ஆதிபுருஷ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. குறிப்பாக படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சியை பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்தநிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த நபரை பிரபாஸ் ரசிகர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆதிபுருஷ் திரைப்படம் பார்த்த பிறகு திரையரங்கிற்கு வெளியே வந்த நபரிடம் படம் எப்படி இருக்கிறது என்று தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளித்த அந்த நபர், “படத்தில் பின்னணி இசை மற்றும் 3டி காட்சிகள் கவனம் ஈர்க்கவிலை. பிரபாஸுக்கு ராமன் கதாபாத்திரம் சரியாக அமையவில்லை. பாகுபலி படத்தில் அவர் ஒரு கிங் போல இருந்தார். ஓம் ராவத் பிரபாசை படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
அவர் பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோதே அங்கு குழுமியிருந்த பிரபாஸ் ரசிகர்கள் அவரை எச்சரித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து பேட்டியளித்தார். பின்னர் பிராபாஸ் ரசிகர்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ் தாக்குதலில் ஈடுபட்ட தனது ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்