விருதுநகர் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Published On:

| By Gracy

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கூலி உடன்பாட்டை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக நீடித்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டி, நூல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கொரோனா, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களை காட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கவில்லை என குற்றம்சாட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி உயர்வு குறித்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நான்கு கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே நேற்று முன்தினம் கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படும் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சீனிவாசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. முடிவில் மூன்று ஆண்டுகளுக்கு 5 சதவிகிதம் கூலி உயர்வும், தீபாவளிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ,000 போனஸாக வழங்கப்படும் எனவும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

வட்டாட்சியர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கையெழுத்திட்ட நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் 35 நாட்களாக நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

-ராஜ்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share