ஆட்சி அதிகாரத்தில் பங்கு; அதிகாரப் பகிர்வு என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !
Time for share of power not only Share of seats” என IDPS நிறுவனத்தின் சர்வே முடிவுகளை முன்வைத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு திமுகவின் முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா, “ சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன், தகைசால் தமிழர் அய்யா பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர். அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது” மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள். இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?” என பதில் அளித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மாணிக்கம் தாகூர், “சகோதரர் @pudugaiabdulla அவர்களுக்கு … நான் காங்கிரஸ் காரன். நேற்று ..இன்று ..நாளை என சங்கிகளை எதிர்த்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் என் தலைவர் அவர்களின் தலைமையில் அஞ்சாமல் குரல் கொடுப்பது என் கடமை. காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவேன். இது எங்கள் இயக்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறிய கருத்து.
இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை” எனக் குறிப்பிட்டு டிசம்பர் 22-ந் தேதி ANI செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியையும் பகிர்ந்துள்ளார்.
