ஆவடி நீட் தேர்வு மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Power cut during NEET exam
கடந்த மே 4ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் ஆவடி மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் ஆவடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் மறுத்தேர்வு நடத்த கோரியும் இந்த தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த சூழலில் தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், மத்திய அரசு நடத்திய விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதி ராமன் அமர்வு இன்று (ஜூன் 10) விசாரித்தது.
அப்போது மாணவர்கள் சார்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
மத்திய அரசு சார்பில் 480 மாணவர்கள் அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியதாகவும் 13 மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என்று மறுத்துவிட்டனர்.
அதே வேளையில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் ஜூன் 16ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர். Power cut during NEET exam