பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து!

Published On:

| By Aara

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று  ( ஜனவரி 8) பகல் ஒரு மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா? அப்படி என்றால் யார் வேட்பாளர் என்ற ஆலோசனையா? என்று கமலாலயத்தில் விசாரித்தோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை விட முக்கியமான ஒரு ஆலோசனை தான் இன்றைய மையக்குழு கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில்  நடந்திருக்கிறது என்கிறார்கள்.

 “பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சித் தேர்தல்கள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் பாஜக மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் தமிழகத்தில் நடந்தது.

ஒரு மாவட்ட தலைவரை தேர்வு செய்ய 60 முதல் 75 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட தலைவர் தேர்தலில் வாக்களிப்பார்கள். இதில் ஏ,பி, சி என மூன்று பேருக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

இப்படியாக மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு பெட்டிகள் கமலாலயத்துக்கு கொண்டுவரப்பட்டன.

அவற்றை பிரித்தெடுக்கும் பணி இன்று காலை முதல் கமலாலயத்தில்  திருப்பதி நாராயணன், வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்குப் பிறகு காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியோடும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்பின் மையக்குழு கூட்டம் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கூடியது.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்றது. பாஜக தேசிய  பொதுச் செயலாளர்  தருண் சுக்,  மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன், மேலிட  பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  மேலிட இணைப் பொறுப்பாளர்  சுதாகர் ரெட்டி மற்றும் தமிழிசை,  வானதி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அடங்கிய இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பற்றிய ஆலோசனை தீவிரமாக நடைபெற்றது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் தத்தமது ஆதரவாளர்கள் மாவட்ட தலைவர்களாக வர வேண்டும் என கடுமையாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

ஏனென்றால் அடுத்து வருகிற மாநில தலைவர் தேர்தலில் மாவட்ட தலைவர்களின் வாக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தங்களது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக கொண்டுவர வேண்டும் என்று ஒவ்வொருவரும் முனைப்பு  காட்டுகிறார்கள்.

அதனால்தான் இந்த கூட்டம் ஒரு மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

முன்பொரு காலத்தில் தமிழக பாஜகவில்  ஆள் இல்லை என்று கிண்டல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது மாவட்ட தலைவர்கள் போட்டிக்கு கடுமையான போட்டி இருக்கிறது, இதுவே எங்கள் வளர்ச்சிக்கான ஆதாரம் என்றும் சொல்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இதுதான் லாஸ்ட் வார்னிங்… தனுஷ் Vs நயன்தாரா… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

திருப்பதியில் கூட்டநெரிசல்… 4 பேர் பலியான சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share