விடுமுறை முடிந்து மறுநாள் காலை வேளையில் சமைத்துக் கொடுப்பதென்றால் சுணக்கமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் விரைவாகவும் ஹெல்த்தியாகவும் செய்ய இந்த உருளை கார்ன் டோஸ்ட் உதவும்.
என்ன தேவை? Potato Corn Toast
பிரெட் ஸ்லைஸ் – 6
உருளைக்கிழங்கு – 2
கார்ன் – அரை கப்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – கால் கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது? Potato Corn Toast
குக்கரை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி உருளை மற்றும் கார்ன் சேர்த்து மூடி, ஐந்து விசில் வரை வேக வைக்கவும். சூடு ஆறியதும் உருளையின் தோல் நீக்கி பிசைந்து கார்ன், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு முக்கோண வடிவில் பிரெட்டை வெட்டவும். பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.
பேக்கிங் டிரேவில் அலுமினியம் ஃபாயில் பேப்பரை விரித்து, அதன் மேல் சிறிது ஆலிவ் ஆயில் விடவும். பிரெட்டின் மேல் வெண்ணெய் தடவி, பிசைந்த உருளைக் கலவையை ஒரு புறம் பூசிக் கொள்ளவும். இதனை பேக்கிங் டிரேயின் உள்ளே வைத்து, ப்ரீ ஹீட் செய்த அவனில் உள்ளே வைத்து மூடி, பதினைந்து நிமிடங்கள் கழித்து திறந்தால், கிரிஸ்பியான உருளை கார்ன் டோஸ்ட் கிடைக்கும்.
அவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லில் எண்ணெய் வார்த்து உருளைக் கலவையை வைத்து செய்து சுவைக்கலாம்.