அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

Published On:

| By admin

இந்திய அஞ்சல் துறை வங்கியின் (India Post Payments Bank) சேவையைப் பயன்படுத்தி, ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வசதியைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் எனப் பல தரப்பினரும் மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு அடையாளமாக ஒவ்வோர் ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்கும்.

கொரோனா பாதிப்பு காலத்தில், ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை நாளை (ஜூலை 1) முதல் செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக, அரசு இ-சேவை மற்றும் பொதுச்சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும், கைரேகை குறியீட்டுக் கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல், ஜீவன் பிரமாண் முகம் பதிவு செயலி (Jeevan Pramaan Face App) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.

இந்த நிலையில், இந்திய அஞ்சல் துறை வங்கியின் (India Post Payments Bank) சேவையைப் பயன்படுத்தி, ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக, ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வசதியை, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மின்னணு வாழ்நாள் சான்று (Digital life certificate) பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், ஓய்வூதியத்துக்கான ஆணை எண் (Pension Payment Order – P.P.O. No), வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

மேற்படி விவரங்களை, அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ, தபால்காரரிடமோ கொடுக்கலாம். ஓய்வூதியதாரருக்கான வாழ்நாள் சான்றை உடனே பதிவிறக்கம் செய்து, தபால் துறை அளித்துவிடும்.

அதை, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று, தபால் மூலமாக சம்பந்தப்பட்ட ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்பினால் போதும். மூத்தோருக்கான ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

– ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share