மணிமாறன் இயக்கத்தில் தமன், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘ஒரு நொடி’. கடந்த ஆண்டு வெளியான இப்படம் மக்களிடமும் விமர்சன ரீதியிலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இப்படத்தின் இயக்குனரும் நாயகனும் மீண்டும் ஒன்றிணைந்து தந்திருக்கும் படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. popular pro again connect with jenma natchathiram
இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிமாறன், படத்தில் பங்கேற்ற பலரது உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். பேச்சின் இடையே, இந்த படத்தில் பிஆர்ஓ ஆகப் பணியாற்றியிருக்கும் சுரேஷ் சந்திராவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் எப்படி இந்த படத்தில் இணைந்தார் என்பதற்கு அவர் சொன்ன ‘பிளாஷ்பேக்’தான் ஹைலைட்.
1991இல் ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற ஹாரர் படம் தமிழில் வெளியானது. தக்காளி சீனிவாசன் இயக்கிய அப்படத்தில் பிரமோத், சிந்துஜா, விவேக், வி.கோபாலகிருஷ்ணன், லூஸ் மோகன் ஆகியோருடன் நாசரும் முக்கியப் பாத்திரத்தில் இடம்பெற்றிருந்தார். மறைந்த பெண் இயக்குனர் ஜெயதேவி அத்தயாரிப்பின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

ஆங்கிலத்தில் வந்த ‘ஓமன்’ படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் ஆக அப்படம் இருக்கும். கேபிள் டிவி யுகம் தொடங்கிய காலகட்டத்தில், 80ஸ் கிட்ஸ் இதனைப் பார்த்துப் பயந்த அனுபவத்தைக் கொண்டிருப்பார்கள்.
திரையுலகில் நுழைந்த சுரேஷ் சந்திரா, அப்படத்தைத் தயாரித்த ’திரை கங்கை பிலிம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அதே பெயரில் புதிதாக ஒரு படம் உருவாகிறபோது, அதில் தானும் இடம்பெற வேண்டுமென்று விரும்பினாராம். அப்படித்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தில் அவர் பிஆர்ஓ ஆகப் பணியாற்றியதாக இயக்குனர் மணிமாறன் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பிஆர்ஓக்களில் ஒருவராக சுரேஷ் சந்திரா விளங்குவதும், அஜித்தின் திரைப்படம் சார்ந்த பணிகளின் பின்னணியில் இவர் இருப்பதும் ரசிகர்கள் அறிந்ததே. ‘இவருக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா’ என்பது போல இருந்தது இந்த தகவல்.

தொண்ணூறுகளில் வந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ அப்படியே ‘ஓமன்’ படத்தின் ‘காப்பி’ ஆக அமைந்திருக்கும். கிட்டத்தட்ட அதன் ‘ப்ரிக்யூல்’ போல இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ இருக்கும் என்று தெரிவித்தார் இவ்விழாவில் பேசிய நாயகன் தமன்.
பழைய ‘ஜென்ம நட்சத்திரம்’ தந்த ‘ஹாரர் பீலிங்’ ஈடிணையற்றது என்பதே அப்படத்தைப் பார்த்தவர்களின் கருத்து. அந்த திரையனுபவத்தை எட்ட முடிந்தாலே, இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ வெற்றியைத் தொட்டுவிடும்..!
