பன்னீரிடம் பொங்கிய பொன்னையன்: புதிய பதவி பின்னணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு துணைத் தலைவராக பொன்னையன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்க மாநிலத் திட்டக்குழு தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமைக்கப்பட்டது. இது முதல்வரை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுத் திட்டங்கள் மற்றும் ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிப்பில் திட்டக் குழு முக்கிய பங்காற்றி வருகிறது. அரசுக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய அமைப்பான இந்தத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்துவந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அரசின் பரிந்துரைப்படி முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனை மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (மார்ச் 9) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2001-2006 காலகட்டத்தில் நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம், உணவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

ADVERTISEMENT

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு தரப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மூத்த நிர்வாகியான பொன்னையனுக்கு திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது,

“பன்னீர்செல்வம் தனி அணி தொடங்கியபோது ஆதரவளித்தவர்களில் கே.பி.முனுசாமியும், பொன்னையனும் முக்கியமானவர்கள். மாநிலங்களவைத் தேர்தலில் கே.பி.முனுசாமிக்கு சீட் வழங்கப்படவுள்ளது தெரிந்து, தனக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பொன்னையன் கேட்டுள்ளார். எனினும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகிய மூவரும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

இதனால் கோபமடைந்த பொன்னையன், ‘எம்.ஜி.ஆர் காலத்து சீனியர் நான். எனக்கே எம்.பி பதவி இல்லைனா உங்ககூட எதுக்கு இருக்கணும்?’ என்றெல்லாம் பன்னீர்செல்வத்திடம் உரிமையோடு கேட்டிருக்கிறார். பொன்னையனின் கோபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர், தனது நிதித் துறையின் கீழ் வரும் திட்டக் குழு துணைத் தலைவர் பதவியை கொடுத்து பொன்னையனை தற்காலிகமாக சமாதானப்படுத்தியிருக்கிறார்” என்கிறார்கள்.

**எழில்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share