பொன்முடி vs மஸ்தான் : வீடூரில் வெடித்த மோதல் – நடந்தது என்ன?

Published On:

| By vanangamudi

அமைச்சர் பொன்முடிக்கும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது . ponmudi vs mastan

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடூர் அணையில் இருந்து மார்ச் முதல் ஜூலை வரை விழுப்புரம், புதுச்சேரி விவசாய நிலங்களின் பாசன  வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு கடந்த மார்ச் 3ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஷட்டரில் திறந்ததும் தண்ணீர் வெளியேறிய போது, பொன்முடியும் மஸ்தானும் ஒன்றாக மலர் தூவினர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பொன்முடி கிளம்பும் போது,  மயிலம் ஒன்றிய முன்னாள் செயலாளர் மலர் மன்னன், “50 வருஷமாக கொடி கட்டுகிறேன்.  கொடி கட்டாமல் இப்படி ஒரு நாளும் நிகழ்ச்சி நடந்தது இல்லை” என்று ஆவேசமாக கத்திக் கொண்டிருக்க,

அருகில் இருந்த பெண் நிர்வாகி, ‘செஞ்சி மஸ்தான் ஏன் கொடி கட்டக்கூடாது’ என்று சொல்கிறார் என கேள்வி எழுப்பினார்.

மலர் மன்னன்

அப்போது பொன்முடியும் அங்கே வர அவரை பார்த்த மலர் மன்னன், ‘ஒரு அமைச்சர் வருகிறார். திமுக கொடி கட்டக்கூடாது  என்றால் என்ன அர்த்தம்’ என கேள்வி எழுப்ப

அவரை பார்த்து பொன்முடி, ‘சரி விடுய்யா.. அமைதியாக இரு’ என்று சொல்கிறார்.

இருந்தும் சமாதானம் ஆகாத மலர் மன்னன் கத்திக் கொண்டே இருந்ததால், ’சும்மா இருய்யா‘ என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார் பொன்முடி.

இந்த சம்பவம் அமைச்சர் பொன்முடிக்கும், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு இடையே மோதல் போக்கு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட திமுக வட்டாரத்தில் விசாரித்த போது,  “

செஞ்சி, திண்டிவனம், மயிலம் தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் வடக்கு மாவட்ட செயாலாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளார். விழுப்புரம், வானூர்  தொகுதிகள் அடங்கிய மத்திய மாவட்டத்துக்கு எம்.எல்.ஏ லட்சுமணன் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் ஆகிய தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பொன்முடியின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடியும், மஸ்தானும் எலியும் பூனையுமாக இருந்து வந்தனர். இவர்களுக்கு இடையேயான மோதல்கள் பல மேடைகளில் வெளிப்படையாக இருந்தது.

இந்தநிலையில் மயிலம் தொகுதியில் உள்ள வீடூர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 3200 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கரும், புதுச்சேரி மாவட்டத்தில் 1000 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

இந்த திறப்பு விழாவையொட்டி மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான்,  ‘இது என்னுடைய மாவட்டம். பொறுப்பு அமைச்சர் என்று யாரும் இல்லை. அதனால் பொன்முடி வரும் போது அவரை வரவேற்கும் விதமாக  விளம்பரமோ, கட்சிக் கொடியோ இருக்கக் கூடாது என்று அந்த பகுதி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

இதனால் அமைச்சர் பொன்முடி வரும் போது முன்னாள் ஒன்றிய செயலாளர் மலர் மன்னன், முன்னாள் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வசந்தா இருவரும் கடுமையாக சத்தம் போட்டனர்” என்றார்கள்.

இதுபற்றி மஸ்தான் தரப்பில் நாம் விசாரித்த போது, “இது கட்சி நிகழ்ச்சி அல்ல… அரசு நிகழ்ச்சி… அதனால் கொடியோ பேனரோ வைக்கக் கூடாது என்று சொன்னதில் என்ன தவறு” என்று கேட்டனர்.

அமைச்சர் பொன்முடி தரப்பில் கேட்டபோது, “தற்போதைய வீடூர் ஒன்றிய செயலாளர் செழியனிடம் மாவட்ட செயலாளர் மஸ்தான், பொன்முடி பெயர் போடக் கூடாது… அவரை வரவேற்கும் விதமாக கொடி, பேனர்கள் கட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அந்த ஆதங்கத்தை தாங்க முடியாமல் முன்னாள் செயலாளர் மலர் மன்னனிடம், ’செஞ்சி மஸ்தான் இப்படி சொல்கிறார்’ என்று தகவல் சொல்லியிருக்கிறார் செழியன்.

இதனால் கோபம் தாங்க முடியாமல் மலர் மன்னன் பேசிவிட்டார்” என்கிறார்கள். ponmudi vs mastan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share