பொன்முடிக்கு எதிரான வழக்கு: ஜனவரி 4இல் விசாரணை!

Published On:

| By Prakash

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2006-11ஆம் ஆண்டுக் காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.

இதன்மூலம் அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகனும் எம்.பியுமான கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி பூர்ணிமா அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோபிநாத் ஆகிய 2 பேர் மட்டும் ஆஜராகினர்.

அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேரும் ஆஜராகவில்லை.

அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏற்கெனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி நிர்மல்குமார் “இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன” எனக் கூறி பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

முகக்கவசம் கட்டாயம்: டெல்லியில் அவசர ஆலோசனை!

“பாஜக எங்களுக்கு தான் மரியாதை தருகிறது” – மா.செ. கூட்டத்திற்கு பின் பன்னீர் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share