அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பின் 26-ஆவது சாட்சியாக வி.அகரம் கிராமத்தின் முன்னாள் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி தற்போது விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் உதவி இயக்குநராக (தணிக்கைப் பிரிவு) உள்ள மோகன் நேரில் ஆஜரானார்.
அப்போது அவர், “உயர் அலுவலர்கள் வற்புறுத்தியதால் கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும், தனக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது” என்றும் அரசுத் தரப்புக்கு எதிராக சாட்சியமளித்தார்.
இதை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமார் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாதது குறித்து நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வருகிற ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை குற்றச்சாட்டு… திமுகவுக்கு வாக்களித்ததால் பெண் கொலையா? – போலீஸ் விளக்கம்!