25 சதவீதம் குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Monisha

pongal price stopped

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் தொகுப்பாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் பெற்றுக் கொள்ளாத நிலையில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைவரும் பெற்றுக் கொள்ளும் வரை நியாய விலை கடைகளில் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024-ஆம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்த திமுக அரசு, பொங்கல் பரிசு பணம் பற்றி அறிவிக்கவில்லை. எனது அறிக்கைக்குப் பின்பு ரூபாய் ஆயிரத்தை பொங்கல் பரிசாக அறிவித்த திமுக அரசு, அதையும் அனைவருக்கும் வழங்காத நிலையில் அறிவிப்பு செய்தது. அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பாக அரிசி, பாசிப் பருப்பு, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

பொங்கல் பரிசுப் பணத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் சொல்லி வந்த கோரிக்கைகளையும் திமுக அரசு ஏற்க மறுத்துவிட்டது.

எங்களது ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்கள், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நியாய விலைக் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. எந்த குடும்ப அட்டைதாரர்களும் விடுபடாமல் பார்த்துக்கொண்டோம்.

திமுக அரசு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதிவரை 5 நாட்கள் மட்டும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை வழங்கியது. பொங்கல் பண்டிகைக்காக முன்னரே சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும், கூட்டம் குறைந்தவுடன் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நேற்று (18.1.2024), நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

அப்போது, ஜனவரி 14-ஆம் தேதியோடு பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை நிறுத்தச் சொல்லி அரசு உத்தரவிட்டதன் பேரில், 14-ஆம் தேதிக்குப் பிறகு நிலுவையில் இருந்த பொங்கல் பரிசுப் பணத்தை அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும், பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் பற்றிய விபரங்களை அரசுக்கு அனுப்பிவிட்டதாகவும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொங்கல் பரிசு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வாங்காதவர்களின் எண்ணிக்கை சுமார் 100 முதல் 200 வரை உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு. 2022 ஜனவரி பொங்கலின் போது பரிசுப் பணம் வழங்காமல், உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, பப்பாளி விதை கலந்த மிளகு, சிறு வண்டுகள் உள்ள ரவை மற்றும் கோதுமை மாவு என்று குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்த முடியாத 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது. தொடர்ந்து, 2023 ஜனவரி பொங்கலின் போது முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு வழங்காமல் பொங்கல் தொகுப்பை அறிவித்தது. எனது அறிக்கை மற்றும் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக கரும்பு சேர்க்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25 சதவீதத்திற்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், ஐந்தே நாட்களில் நிறுத்திய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அறிவிக்கப்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ரொம்பவே காஸ்ட்லி… எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share