பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

Published On:

| By Prakash

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிவந்தது.

ADVERTISEMENT

ஆனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு, அரிசி, சர்க்கரை ஆகிய இரண்டு பொருட்களுடன் தலா ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு, பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 28) காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் கரும்பு ஒன்றையும் ரூ.1,000 ரொக்கத்துடன் வழங்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியை நம் மின்னம்பலத்தில், பொங்கல் தொகுப்பில் கரும்பு: அரசு அறிவிப்பு என்ற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ளோம்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர், பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டது.

ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

அதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிசம்பர் 24 ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.எஸ்.சௌந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 2 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

ஜெ.பிரகாஷ்

டோனி மகளுக்கு மெஸ்சி அளித்த பரிசு!

பிரதமரின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author
Prakash
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share