பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்கும் பணி ஜனவரி 10-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-2025ம் ஆண்டுக்கான கரும்பு அரவை நேற்று (டிசம்பவ் 14) தொடங்கியது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கரும்பு அரவையை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு ரூ.5.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, ‘‘பொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் வழங்க உள்ளோம். கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் வந்ததால் வேட்டி, சேலை வழங்குவதில் சற்று காலதாமதமானது. இந்த ஆண்டு அது போல நடக்காது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்காக வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, வருவாய்த்துறையிலிருந்து நியாய விலை கடைகளுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்படவுள்ளது.
வேட்டி, சேலைகள் தரமாகவும், பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் 90 சதவிகிதம் வழங்கப்படும். ஜனவரி 10-ம் தேதிக்குள் மொத்தப் பணிகளும் முடிக்கப்படும். விலையில்லா வேட்டி, சேலைகளை நெசவாளர் சங்கங்கள் தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் அதற்கான ஒப்பந்தங்களும் விடப்படுகிறது. ஆனால், பலர் குறைகளை கூறினார்கள். ஆனால் நாங்கள் அவற்றை பரிசோதனை செய்து தான் விலையில்லா வேட்டி,சேலைகளை வழங்குகிறோம்.
15 ரகங்களில் சேலைகளை வழங்க உள்ளோம். துணிகள் ஒன்று, இரண்டு சிறிய அளவில் பாலிஸ்டர் கலப்படம் இருக்கும். ஆனால் முழுவதும் தரமானதாக அளிக்கிறோம். மேலும் 5 ரகங்களில் வேட்டிகளையும் வழங்க உள்ளோம். திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து கைத்தறிதுறை அமைச்சர் என்ற முறையில் நானே பதில் அளித்தேன். அதன் பிறகு யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை.
நூலின் விலை உயரவில்லை, கட்டுபாட்டில் தான் உள்ளது. காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கட்டுப்பாட்டில் நூல் விலை உள்ளது. சைமா எனப்படும் சௌத் இந்தியா மில் அசோஷியேசன் கோரிக்கையை ஏற்று வரியை நீக்கினோம். மில்களுக்கு மானியம் அளித்தோம். இதனால் துணி மில் உரிமையாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வரை சந்தித்து நன்றி கூறவுள்ளனர்.
மில்களில் இயந்திரங்களை புதுப்பிக்க 8 சதவிகித வட்டி வங்கிக்கு கட்டினால் 6 சதவிகிதம் அரசே அளிக்கிறது. நிதி நிலை எப்படி இருந்தாலும் அதனை சரியாக கையாண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா துறைகளுக்காகவும் சிந்தித்தும், சிறப்பாகவும் செயல்படுகிறார்’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!
உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல… அப்டேட் குமாரு
மகனுக்காக வேலையை விட்ட தந்தை… குகேஷுக்கு குவியும் ‘கேஷ்’
“20 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததில்லை” :சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் வருத்தம்!