பொங்கல் பரிசுத் தொகை.. இன்று அறிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Mathi

Pongal Cash MK Stalin

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நியாய விலைக்கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு இந்த தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதன் பின்னர் திமுக ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பும் பரிசுத் தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2024-ல் இந்த பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 2026 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் பரிசுத் தொகையை வழங்குவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இதுபற்றி நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், “பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ3,000 கொடுக்கிறதுக்கான சோர்ஸ் பண்ட் பற்றி சிஎம் ஏற்கனவே கேட்டாரு.. நிதித்துறை அதிகாரிகளோ, அவ்வளவு பண்ட் இருக்காதேன்னு தயங்கி இருக்காங்க..”என எழுதி இருந்தோம்.

இதனிடையே பொங்கல் தொகுப்பு பொருட்களை கொள்முதல் செய்ய ரூ.248 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதனால் பரிசுத் தொகை குறித்த கேள்வியும் எழுந்தது.

ADVERTISEMENT

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ5,000 வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பனிடம் பொங்கல் பரிசு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “மக்கள் மகிழத்தக்க வகையிலான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 4-ந் தேதி ரேஷன் கார்டுதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share