பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? : சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By christopher

Pon Manikavel bail... Court question to CBI

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது பதிந்துள்ள வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? முடியாததா? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 29) உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கில் தன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை எழுப்பி பொய் வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதிமன்றமும் சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொன்.மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ”பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மைகள் வெளிவரும். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சீலிடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்து, அதில் போதிய விவரங்களும், போதிய முகாந்திரங்களும் உள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

அதனை ஏற்று சீலிடப்பட்ட கவரை முழுமையாகப் படித்துவிட்டு நாளை (இன்று) விசாரணையைத் தொடரலாம் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது பதிந்துள்ள வழக்கு ஜாமின் வழங்க கூடியதா? அல்லது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என சிபிஐ தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளிக்குமாறு சிபிஐ தரப்புக்கு  உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’யாரு சாமி நீ’: தேசிய விளையாட்டு தினத்தில் மாஸ் வீடியோ பகிர்ந்த ராகுல் காந்தி

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் சித்திக்.. கட்டிப்பிடித்து அழுத நடிகை…. உண்மை என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share