தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 68,000 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், புதிதாக 6,000
அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் ஆளும் திமுக உட்பட புதிய கட்சியான விஜய்யின் தவெக வரை தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன.
200 தொகுதிகளில் வெற்றி என இலக்குடன் திமுக களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே போன்று சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்ட நிலையில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணத்தை கடந்த வாரம் திருச்சியில் வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் விஜய்.
இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 68,000 வாக்குச் சாவடிகள் இருந்தன. இந்த நிலையில் பெரிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக 6,000 உயர்த்தி வாக்குச் சாவடிகள் 74,000ஆக மாற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது
அதன்படி ஒரு வாக்குச் சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்குச் சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.