தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோக்கள் எடுக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க.. என்னை விட்டுவிடுங்க.. (ஆடைகளை) கழற்றிவிடுகிறேன்’ என இளம் பெண் ஒருவர் கதறிய ஆடியோ தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களின் வாரிசுகளின் பெயர்களும் உருண்டன. இந்த சம்பவம் தொடர்பாக 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. பின்னர் சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு,ஹேரேன் பால், பைக் பாபு, அருளானந்தம் (அதிமுக முன்னாள் நிர்வாகி), அருண்குமார் ஆகிய 9 பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை நீதிபதி நந்தினிதேவி விசாரித்து வந்தார். இவ்வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துவரப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள் என்றும் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி நந்தினிதேவி அதிரடித் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி நந்தினிதேவி அதிரடியாக உத்தரவிட்டார்.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரம்:
சபரிராஜன் – 4 ஆயுள்தண்டனை; திருநாவுக்கரசு – 5 ஆயுள்தண்டனை; சதிஷ் – 3 ஆயுள்தண்டனை: வசந்தகுமார் – 2 ஆயுள்தண்டனை; மணி (எ) மணிவண்ணன் – 5 ஆயுள்தண்டனை; பாபு – 1 ஆயுள்தண்டனை; ஹேரோன் பால் -3 ஆயுள்தண்டனை; அருளானந்தம் – 1 ஆயுள்தண்டனை; அருண் குமார் – 1 ஆயுள்தண்டனை.