உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி: முனீஸ்வர்நாத்தை பரிந்துரைத்த கொலிஜியம்!

politics

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட முனீஷ்வர்நாத் பண்டாரி, தலைமை நீதிபதியின் பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் டிசம்பர் 14, 2021 முதல் ஜனவரி 29, 2022 வரை நடைபெற்ற கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்த உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசா உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிக்கு 17 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்றுள்ள நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீதித்துறை நிர்வாகத்தை மேம்படுத்த தங்களது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *