{ஹைட்ரோ கார்பன் கிணறுகள்: வலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி வெளியிட்ட உத்தரவை மேற்கோள் காட்டி இத்திட்டத்தை Category ‘B2’ அடிப்படையில் கருதி சுற்றுச்சூழல் அனுமதிக்காக பரிசீலிக்க வேண்டும். அதனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி 16ஆம் தேதிக்கு முன்பு வரை ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் திட்டம் அனைத்தும் Category ‘A’ ஆக இருந்தன. ‘A’ என வரையறுக்கப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பது, திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியமாகும். இவற்றிலிருந்து விலக்களிக்க ஆய்வுக் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை Category ‘B2’ என மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திருத்தத்தை எதிர்த்து மீனவத் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார், மீனவ நலச் சங்கம் தென்மண்டலம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன்ஆய்வு கிணறுகளுக்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இரண்டு நாட்கள் தான் முடிந்துள்ளன. அதற்குள் தமிழ் நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிச்சியளிக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு,

”தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்தும் அதை மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓஎன்ஜிசி அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வரை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏல அறிவிப்பில் உள்ள அந்த டெல்டா பகுதியை நீக்க வேண்டும் என்றும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதி என்பதால் கைவிட வேண்டும் என்றும் வற்புறுத்தி, தமிழ்நாட்டு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு, பல பகுதிகளில் தூர்வாரும் பணியும் செவ்வனே நடைபெற்று, விவசாயப் பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபடவேண்டிய இந்த நேரத்தில், விவசாயிகளுக்கு வேதனை கண்ணீர் வருவதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது. உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப்பெற வேண்டியது அவசரம், அவசியமாகும்” என தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று(ஜூன் 16) ட்விட்டரில் “தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்த பிறகு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பது விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே, விவசாயிகளுடைய நியாயமான அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment