திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாகவும், அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, 2017 ஜூன் 19ஆம் தேதி சட்டமன்றத்திற்கு குட்காவுடன் வந்த ஸ்டாலின் இதுகுறித்து பேச முயன்றார். ஆனால் அவைக்கு ஸ்டாலின் குட்கா எடுத்து வந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த சம்பவம் நடந்த 40 நாட்களுக்குப் பிறகு, ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.சட்டசபை உரிமை மீறல் குழுவின் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில்,’திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்கிறது. சபாநாயகரும், உரிமை மீறல் குழுவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் கடந்த ஜூலை 11ஆம் தேதி முறையிட்டனர். அதில், “ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஆகவே, வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணையில் திமுக தரப்பில், “உரிமை மீறல் பிரச்சனையில், சட்டமன்ற விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பாரபட்சமான முறையில் முன்கூட்டியே தீர்மானித்து உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்துவிட்டார்” என்று சபாநாயகர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால், உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்த திமுக வழக்கறிஞர்கள், “குட்கா எளிதாகக் கிடைப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவே சட்டமன்றத்துக்குள் அவற்றை எடுத்துச் சென்றோம். சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை, உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை” என்று வாதிட்டனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “பெரும்பான்மை குறைவாக இருந்ததால் 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறுவது தவறானது. தொடக்கம் முதல் தற்போது வரை அதிமுக அரசு எந்த நிலையிலும் பெரும்பான்மை இழக்கவில்லை. தற்போது அரசுக்கு 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததற்குத்தான் 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமை மீறல் குழுவின் விசாரணைக்குப் பரிந்துரைத்தார் என்றும் வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக திமுகவினருக்கு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், அதனை சரிசெய்து உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக அனுப்பப்படும் நோட்டீஸுக்கு மனுதாரர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்கலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**�,