கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்-காவி சால்வை போராட்டம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, விவாதப் பொருளாகியுள்ளது. மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வந்த நிலையில், நாளைவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இதற்கிடையில், ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு செல்ல அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து ஐந்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விசாரித்த நீதிபதி கிருஷ்ண தீட்சித், வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், ஹிஜாப் தொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்க விரிவான அமர்வு அமைப்பதற்கு வசதியாக இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்திக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று(பிப்ரவரி 10) பிற்பகல் ஹிஜாப் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசாங்கம் நெருப்புடன் விளையாடுகிறது. ஹிஜாப் அணிவது மத நடைமுறையில் இல்லை என்று அரசு உத்தரவில் கூறுகிறது. எங்களது அடிப்படை உரிமைகளை சில பள்ளிக் குழுக்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளன. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே உள்ளனர். இந்த மாணவர்களுக்கு வருகிற மார்ச் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாணவர்கள் ஒரே சீருடையுடன் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கும் வகையில் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், “ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளின் கீழ் வருமா? என்பது குறித்தும், ஹிஜாப் அணிவது மத நடைமுறையின் இன்றியமையாத அங்கமா? என்பது குறித்தும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.
பள்ளிகளை திறக்க உத்தரவிடுகிறோம். ஆனால், வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு
வரும்வரை எந்த மாணவர்களும் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்துவர அனுமதியில்லை.இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம்.
இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டுவர வேண்டும் என்பதால் அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். இந்த பிரச்சனை சில நாட்களில் முடிவடைந்துவிடும். அதனால், தயவுசெய்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற திங்கள்கிழமை(பிப்ரவரி 14) மீண்டும் விசாரிப்போம்”என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**