கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு 50 சதவிகிதப் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 3,711 பேரும், செங்கல்பட்டில் 1,029 பேரும், மதுரையில் 366 பேரும், சேலத்தில் 383 பேரும், திருவள்ளூரில் 508 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரிக்கிறது. அதனால், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனை நிறுவனச் சட்டம் மற்றும் மாநில மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில், “கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள மொத்த படுக்கைகளில் 50 சதவிகிதப் படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.
அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளை அனுமதிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருத்துவமனை நிர்வாகங்கள், கொரோனா சிகிச்சை தொடர்பான விவரங்களை மாவட்டஇணை சுகாதாரத்துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்திலோ நாள்தோறும் தெரிவிக்க வேண்டும்.
அதுகுறித்த [இந்த](https://stopcorona.tn.gov.in/)இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மாவட்ட இணை சுகாதாரத்துறை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,