போர் பகுதிகளுக்கு நேரில் சென்ற அதிபர் ஜெலன்ஸ்கி

Published On:

| By admin

ரஷ்யா – உக்ரைன் போர் 100 நாட்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் பகுதிகளுக்குச் சென்று ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தியுள்ளார். தற்போது ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, உக்ரைன் கிழக்கு மாகாணங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். ரஷ்யா தாக்குதல்களை முறியடித்துக் கொண்டிருக்கும் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஜெலன்ஸ்கி இந்தச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

முதலில் உக்ரைன் கிழக்கில் உள்ள தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் உள்ள ராணுவ முகாம்களுக்குச் சென்றார். பின்னர் தென்மேற்கே உள்ள பாக்முத் என்ற இடத்துக்குச் சென்றார். இந்தப் பகுதிகளுக்குச் சென்ற அதிபர் ஜெலன்ஸ்கி, ராணுவ வீரர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார். மேலும் நாட்டுக்காகப் போராடும் வீரர்களிடம் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “நான் போர் நடக்கும் பகுதிகளுக்கு சென்று ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தேன். நாட்டுக்காகப் போராடும் ஒவ்வொரு ராணுவ வீரர்களையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான நாயகர்கள்” என்ற பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், “ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்களால் அழிந்துபோன துறைமுக நகரான மரியுபோலில் இருந்து தப்பித்து வெளியேறிய மக்கள் தென்கிழக்கில் அமைந்த ஜபோரிஜ்ஜியா பகுதியில் தங்கியுள்ளனர். நான் அவர்களை சென்று நேரில் சந்தித்தேன். ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு சொந்த கதை உள்ளது. பலரது குடும்பத்தினர் தாக்குதல்களில் இறந்தனர். இது பெருத்த சோகம். தற்போது ரஷ்யத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் அதை தைரியமாக எதிர்கொண்டு ரஷ்ய ராணுவ முன்னேற்றத்தைப் பின்தள்ளி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share