நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராகும் ஜூன் 13ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் சோனியா காந்தி அமலாக்கத் துறையில் நேற்று ஆஜராகவில்லை. ராகுல் காந்தி வெளிநாட்டிலிருந்ததால் அவரை வரும் ஜூன் 13ஆம் தேதி டெல்லி அமலாக்கத் துறையில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ,பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் கூட்டப்பட்டது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ஜூன் 13 ஆன்று அனைத்து காங்கிரஸ் எம்.பி.களும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி ராகுல் காந்தியுடன் பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயத்தில், ஒவ்வொரு மாநில தலைநகரிலும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அமலாக்கத் துறை அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
**-பிரியா**