டெல்டாவில் அமைச்சர்கள் ஆய்வு: ஏக்கருக்கு நிவாரணம் எவ்வளவு?

Published On:

| By Balaji

கடுமையான மழைப் பொழிவால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ள சூழலில் நேற்று (நவம்பர் 12) தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்கள்.

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் பற்றி ஆராய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, வீ. மெய்யநாதன் ஆகியோரை கொண்ட குழுவை முதல்வர் நவம்பர் 11ஆம் தேதி அறிவித்தார்.

இக்குழுவினர் நேற்று (நவம்பர் 12)காலை தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் முதல் கட்ட ஆய்வை நடத்தினார்கள் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர்கள் குழுவினர் தஞ்சை, திருவாருர், நாகை மாவட்டங்களில் நேற்றே ஆய்வு செய்தனர்.

முதலில் தஞ்சாவூர் மாவட்டம் பெரியகோட்டை மதுக்கூர் பகுதியில் மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் அதிகமான நீர் வரத்தால் நிரம்பி வழியும் கண்ணனாறு தாய்ப்பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கே அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சேத விவரங்களை கணக்கு எடுத்துள்ளோம். அவற்றை முதல்வரிடம் அறிக்கையாக அளிக்க உள்ளோம். வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

பின் திருவாரூர் மாவட்டம் புழுதிக்குடி,கோட்டூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளோடு உரையாடினார்கள். அங்கே விவசாயிகள் சேதம்டைந்த பயிர்களைக் காட்டி அமைச்சர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்தனர்.

அவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறி. நிச்சயமாக முதல்வரிடம் கூறி தகுந்த நிவாரணம் அறிவிக்கச் சொல்கிறோம் என்று தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் சூரனூர் பகுதியில் மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது. திமுக மாவட்டப் பொறுப்பாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அவர்களுடன் இருந்து விவசாயிகளின் துயரத்தை சுட்டிக் காட்டினார். அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர்கள் மூழ்கிவிட்டதால் அப்பயிர்களை நீருக்கடியில் இருந்து எடுத்து வந்து அமைச்சர்கள் முன் வைத்து விளக்கினார் கலைவாணன்.

நாகப்பட்டினம் மாவட்டம் நீர்முளை பகுதியில் மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது. கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அமைச்சர்கள் குழுவுடன் இருந்து விவசாயிகளின் நிலையை நேரில் சென்று காட்டினார். பின் அருந்தவப் புலம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

,நாகையில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய அமைச்சர் ஐ. பெரியசாமி, “ வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம். தஞ்சை,திருவாரூரில் ஆய்வு செய்துவிட்டு தற்போது கடைமடை பகுதியான நாகை மாவட்டம் அருந்தவம்புலம் வந்து ஆய்வு செய்துள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில் மழையால் 1 லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கோள்வோம்.

பயிர் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளும் எங்களிடம் வைக்கப்பட்டன. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் வகையில் திறந்து வைக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் ஆறு, குளம், ஏரி தூர்வாரப்படவில்லை”என்றார்.

நிவாரணத் தொகை எவ்வளவு வழங்கப்படும் என்ற கேள்விக்கு, “நாங்கள் அறிக்கை கொடுத்த பின் அதை முதல்வர் முடிவு செய்வார்” என்று தெரிவித்தார் அமைச்சர் ஐ. பெரியசாமி. இதன் பின் மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதிக்கும் சென்று அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

டெல்டா அமைச்சர்களின் பரிந்துரைக்கு ஏற்ப டெல்டா மாவட்டங்களுக்கு வரும் முதல்வரும் தனது ஆய்வை மேற்கொண்டு அதன் பின் நிவாரணம் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராகவேந்திரா ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share