முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தமிழக விஜிலென்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ஆகஸ்டு 10 ஆம் தேதியன்று சென்னை, கோவை உள்ளிட்ட 60 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டைத் தொடர்ந்து வேலுமணி கைது செய்யப்படுவார் என்று விஜிலென்ஸ் வட்டாரத்திலேயே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் வேலுமணி கைது செய்யப்படவில்லை. மாறாக அவர் விஜிலென்ஸ் ரெய்டு முடிந்த பின் கொடுத்த அறிக்கையே பொய் என்றும் தன்னிடம் இருந்து எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார் வேலுமணி. இதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும் சொல்லிவிட்டு கோவை புறப்பட்டுச் சென்ற வேலுமணிக்கு பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
[வேலுமணி கைது முடிவு கடைசி நேரத்தில் மாறிய பின்னணி](https://minnambalam.com/politics/2021/08/11/23/velumani-arrest-decision-changed-last-minute-how-eps-ops-mkstalin-kandhasamyips) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஆகஸ்டு 11ஆம் தேதியன்றே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவருமான செந்தில் ஆறுமுகம் இன்று (ஆகஸ்டு 16) ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்டு 16) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில், பலநூறு கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளன என்பதை அறப்போர் இயக்கம் வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எஸ்.பி.வேலுமணியோ சர்வ சுதந்திரமாக தமிழகம் முழுக்க சுற்றிவந்து ‘சத்ரு சம்கார’ யாகங்கள் செய்துகொண்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது, டெண்டர் எடுத்த தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன, தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது.. இப்படி முறைகேட்டுப் பட்டியல் விரிவாகப் போகிறது.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், எஸ்.பி.வேலுமணியின் ”அசுர பலத்தை” மனதில் கொண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்யவேண்டும். தாமதிக்கும்பட்சத்தில், ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிப்பது, சாட்சிகளைக் கலைப்பது, வழக்கின் விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது போன்றவற்றை எஸ்.பி.வேலுமணி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை”என்று குறிப்பிட்டிருக்கும் செந்தில் ஆறுமுகம் தொடர்ந்து, “மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற செய்திதான், எந்தவிதக் கூச்சமுமின்றி தொடர்ந்து லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவோர்க்கு தரப்படும் எச்சரிக்கையாக இருக்கும். எஸ்.பி.வேலுமணி விவகாரம் மட்டுமல்ல, லஞ்ச-ஊழல் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வேலுமணி டீல் பேச நேரம் கொடுக்காமல் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். டீலா ஜெயிலா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் செந்தில் ஆறுமுகம்.
**-வேந்தன்**
�,