யூடியூபர் மதனின் பேச்சைக் கேட்கமுடியவில்லை : நீதிமன்றம்!

Published On:

| By Balaji

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் பேச்சுகளைக் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனினும் விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் பப்ஜியை பலர் விளையாடி வருகின்றனர்.  இந்த விளையாட்டைச் சிலருடன் இணைந்து விளையாடுவதோடு, அதனை யூடியூபில் குரல் வர்ணனையுடன் நேரலையாக சேலத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞர் ஒளிபரப்பி வந்தார்.

TOXIC MADAN 18+ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்த மதன், குரல் வர்ணனையில் ஆபாசமான  வார்த்தைகளைப் பேசி வந்தார். அவர் வெளியிடும் வீடியோக்களில் பெண்களை ஆபாசமாகப்  பேசுவது, அவருடன் விளையாடுபவர்களை தரக்குறைவாகப் பேசுவது இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர்  மதன் மீது  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில்,  மதன் நடத்தும் சேனலை பெரும்பாலும் சிறுவயதில் உள்ளவர்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். மிகவும் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையிலான இவருடைய பேச்சு  யூடியூபில் தினமும் வெளியாகிறது. அவர் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும். எனவே அவரது சேனலை தடை செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து மதன் மீது மாநிலம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் 167 புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து மதன் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம்,  சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில், சேலத்திலிருந்த மதன் வீட்டிலிருந்து அவரது தந்தை, மனைவி ஆகியோர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த ‘டாக்சிக் மதன் 18+’ என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகா இருந்து வந்தது தெரியவந்தது.  மதனுடன் வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் அவரது மனைவியுடையதுதான்  என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிருத்திகாவைக் கைது செய்த போலீசார் நேற்று (ஜூன் 16) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதனிடையே மதன் பெண் ஒருவரிடம் பேசும்  ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “நான் ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அப்படியே சென்றாலும்  திரும்ப வந்து இதை விட வேகத்துடன் யூட்யூப் சேனலை நடத்துவேன். அதற்கு மதன் ‘யூ டியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன். நித்யானந்தா போன்றவர்கள் எல்லாம்  வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்து விடுவார்களா. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்” என்று மதன் பேசுகிறார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 17)  செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால்,  “மதனை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்.  இந்த வழக்கில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஆதாரம் உள்ளது. விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் கூறமுடியாது. விரைவில் கைது செய்வோம்” என்றார்.

அதுபோன்று முன் ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில்,  சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில்  மதன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், மதனின் வீடியோக்களை பார்ப்பவர்களில் 30 சதவிகிதம் பேர் பள்ளி மாணவர்கள் தான். மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மதனின் பேச்சை காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு உள்ளது.  யூடியூப்பில் மதன் பேச்சை கேட்டுள்ளீர்களா என மதன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக மதன் தரப்பில், பதிலளிக்கப்பட்ட நிலையில்,முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதே சமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடியாகவோ, பென் டிரைவிலோ தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share