சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் வழியில் எடப்பாடி

politics

அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் என்பதில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். ஒற்றைத் தலைமை என்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளுக்கு சென்று கட்சியின் இரட்டை இலை சின்னம் கூட கேள்விக் குறியாகும் என்று பன்னீர் தரப்பு எச்சரித்தது. அப்படியே அவர்கள் சென்றால் கூட பொதுக்குழுவில் பெரும்பான்மையோடு ஒற்றைத் தலைமையை பெற்றுவிட்டால் அதன் பின் வழக்கு விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு இருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி வீட்டில் நடந்த இது தொடர்பான ஆலோசனைகளில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களும் உடன் இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

1994 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் என்.டி.ராமராவை 1995 ஆம் ஆண்டு அவரது மருமகனான சந்திரபாபு முதல்வர், கட்சித் தலைவர் என இரு பதவிகளில் இருந்தும் வெளியேற்றினார். 200க்கும் மேற்பட்ட தெலுங்குதேச சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 28 பேர்தான் ராமராவோடு இருந்தனர். பெரும்பான்மையோர் சந்திரபாபு நாயுடு பக்கம் வந்துவிட்டனர். இதனால் ராமராவ் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தன் கட்சியை கலைப்பதற்கான முயற்சிகளில் ராமராவ் இறங்குவதற்குள் தெலுங்குதேச கட்சியின் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார் சந்திரபாபு நாயுடு.

அதில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராமராவை நீக்கிவிட்டு சந்திரபாபு நாயுடுவை புதிய தலைவராக தேர்ந்தெடுத்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இரண்டிலும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற்றார்.

1995 டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தலைமையிலான தேர்தல் ஆணையம். முழுமையான விசாரணைக்குப் பிறகு தெலுங்குதேசம் கட்சியும், சைக்கிள் சின்னமும் சந்திரபாபு நாயுடுவுக்கு உரியது என்று தீர்ப்பளித்தது.

அப்போது எம்.பி.யாக இருந்த ரேணுகா சௌத்ரி தேர்தல் ஆணைய விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரிதும் உதவினார். “நான் அந்த நாட்களில் வானத்தையும் பூமியையும் நகர்த்தி தெலுங்குதேசம் என்ற கட்சியையும் அதன் சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு உதவினேன்” என்று கூறியிருந்தார் ரேணுகா. அதன்பிறகு சில விஷயங்களில் சந்திரபாபு நாயுடுவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியை விட்டு வெளியேறிவிட்டார் ரேணுகா.

**சமாஜ்வாதி அகிலேஷ் சைக்கிள்**
இதேபோன்ற நிலைமை சமாஜ்வாதி கட்சியில் 2017 ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ்வுக்கும், அவரது சொந்த மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்டது. கனத்த மனதோடு கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ்வை நீக்கிய அகிலேஷ் யாதவ் சமாஜ் வாதியின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனபோதும் முலாயம் சிங்கின் ஆசியோடே தனது கட்சி நடக்கும் என்றார், இந்தப் பிரச்சினைகளுக்கு குடும்ப விவகாரங்கள் பெரும் காரணமாக சொல்லப்பட்டன.
ஆனாலும் முலாயம்- அகிலேஷ் என இரு பிரிவாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் சமாஜ் வாதி கட்சியையும், சைக்கிள் சின்னத்தையும் அகிலேஷ் யாதவுக்கே வழங்கியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பில், “அகிலேஷ் யாதவ் சார்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் 31 தேசிய குழு உறுப்பினர்கள், 5242 கட்சி பிரதிநிதிகள், 195 எம்.எல்.ஏ.க்கள், 48 எம்.எல்.சி.க்கள், 4 எம்பிக்கள், 11 ராஜ்யசபா எம்பிக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முலாயம் சிங் சார்பில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் சமாஜ்வாதியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் அங்கீகரிக்கப்பட்டு, அவருக்கே சைக்கிள் சின்னம் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில்தான் தாங்கள் இருந்த கட்சியின் தலைமையை கைப்பற்றினார்கள். அதேநேரம் அவர்களிடம் அதற்குரிய பெரும்பான்மையும் இருந்தது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன. இந்த வகையில் அதே வழியில் செல்லலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தங்களுக்கு சாதகமான இந்த வழக்குகளை எடப்பாடி தரப்பினர் இப்படி குறிப்பிட்டுக் காட்ட பன்னீர் செல்வம் தரப்பினரோ, “அதிமுகவின் பைலா அந்த கட்சிகளை விட வித்தியாசமானது. அடிப்படை உறுப்பினர்கள் முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மாற்றியமைக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவிக்கிறார்கள்.

ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை, அதிமுகவின் சட்ட விதிகள்,ஏற்கனவே வந்த நீதிமன்றத் தீர்ப்புகள் என இரு பக்கமும் தீவிர ஆலோசனை தொடர்கிறது.

-**ஆரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *