ஆளுநர் அதிகாரக் குறைப்பு: முதல்வர் தகவல்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக மாநில ஆளுநர்கள் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் தான் நியமித்து வருகின்றனர்.

இந்தசூழலில் துணை வேந்தர்கள் நியமனத்தில் சர்ச்சைகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. துணை வேந்தர்கள் நியமனங்களில் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர்கள் நியமனம் குறித்து முதல்வர் சட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது.

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் 1949ல் இருந்தே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. இது பிரதமருக்கும் நன்றாகத் தெரியும்.

எனவே துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசின் பங்கும் வேண்டும். இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் அரசாங்கமே துணை வேந்தர்களை நியமித்துவிட்டது. இதன் பிறகு அந்த மாநில ஆளுநர், ‘நான் தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டது எல்லாம் செய்திகளில் வெளிவந்தது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு என்பதே சிறப்பாக இருக்கும். அடுத்த கூட்டத்தொடருக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மார்ச் மாதம் வரக் கூடிய நிதிநிலை கூட்டத்தொடரில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிட்டார்.

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share