5 மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகள் சோதனைக்கு செல்லும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலகம் முழுவதும் 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், 3.50 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,38,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4022 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாததால், அதனைக் கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளை மத்திய அரசும், தனியார் நிறுவனங்களும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.100 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் உடனான உரையாடலின்போது சில தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரசைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு ஆய்வு நிலைகளில் உள்ளன. இதற்கான முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது” என்று குறிப்பிட்ட ஹர்ஷவர்தன்,
தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியாவும் தனது பங்களிப்பை முன்னெடுத்துள்ளதாகவும், இந்தியாவில் 14 தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன எனவும், இதில் 4 தடுப்பூசிகள் அடுத்த 3-5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று கணிப்பது மிகவும் கடினம் எனக் குறிப்பிடும் அவர், “ஒரு மருத்துவராக இது சம்பந்தப்பட்ட செயல்முறை, ஒரு வருடத்திற்குள் வரும் என்று என்னால் கூற முடியும். தடுப்பூசி கண்டுபிடிக்காத வரை, மக்கள் முகமூடி மற்றும் சமூக இடைவெளி போன்ற சமூக தடுப்பூசிகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,