ஒரு வருடத்துக்குப் பின் ஆளுநரை சந்தித்த முதல்வர்

politics

ஒரு மாநிலத்தின் முதல்வரும் ஆளுநரும் சந்தித்துக் கொண்டால், எதற்காக சந்தித்துக் கொண்டார்கள் என்பது வேண்டுமானால் செய்தியாக வரலாம். ஆனால் சந்தித்துக் கொண்டார்கள் என்பதே செய்தியாகியிருக்கிறது தெலங்கானாவில்.

தெலங்கானா மாநில முதல்வரான கே.சி. சந்திரசேகர ராவ், அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் ஆகியோர் சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு இன்று (ஜூன் 28) சந்தித்துக் கொண்டதுதான் தெலங்கானா தாண்டியும் செய்தியாகியிருக்கிறது.

ஒன்றிய அரசை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில ஆளுநர் தமிழிசையோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், அவரை சந்திப்பதையுமே தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 28) தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உஜ்ஜல் புயனுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜ்பவனில் பதவியேற்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில்தான் ஒரு வருட காலத்துக்குப் பின் முதல்வர் கே.சி. சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசையை சந்தித்தார்.
அவரோடு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா சபாநாயகர் சீனிவாச ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் அவர்கள்,அமைச்சரவை துறை செயலாளர்கள், ஹைதராபாத் மாநகர மேயர் என பலரும் கலந்துகொண்டார்கள்.

ஆளுநரை முதல்வர் மதிப்பதில்லை என்று டெல்லி வரை பிரச்சினை சென்ற நிலையில், இன்று நடைபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்றதோடு அவரது அமைச்சரவை சகாக்களும் பங்கேற்றனர். விழாவில் விருந்திலும் ஆளுநர் தமிழிசையோடு கலந்துகொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் முதல்வர் சந்திர சேகர ராவ். இந்த காட்சிகள் தெலங்கானா அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

தன்னை தீவிரமாக எதிர்த்த முதல்வருக்கு எதிராக தானும் அதேபோன்ற எதிர்ப்பைக் காட்டாமல் சகிப்புத் தன்மையோடு, தெலங்கானா மாநில நலனுக்காக இந்த விவகாரத்தைக் கையாண்டு வெற்றிகண்டிருக்கிறார் தமிழிசை என்று தெலங்கானா மாநில அரசியல் விமர்சகர்கள் சமூக தளங்களில் எழுதுகிறார்கள்.

தெலங்கானாவில் இந்த மோதலுக்கு முற்றுப் புள்ளி வைத்த தமிழிசை சௌந்தர்ராஜன்… நேற்று புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்களோடு பங்கேற்றார். ரங்கசாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *