தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக சுபவீ நியமனம்!

Published On:

| By Balaji

தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதும், துறைகளுக்கு புதிய முகங்களை அறிமுகம் செய்வதும் அதிகரித்துள்ளது.

அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஊரில் இராம. சுப்பையா விசாலாட்சி என்ற தம்பதிக்கு இரண்டாவது மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தார். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான சுப.முத்துராமன் இவருடைய அண்ணன்.

திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இவர், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். கடவுள் மறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தன்னுடைய 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றார். 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவி, தற்போதுவரை அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ‘கருஞ்சட்டைத் தமிழர் ‘ என்னும் மாதம் இருமுறை இதழின் ஆசிரியராக உள்ள இவர், இலக்கியம், அரசியல், வரலாறு, எனப் பல்வேறு துறைகளில் 21 நூல்களை எழுதியுள்ளார்.

**எதிர்ப்பு**

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில், கள்ளக் காதலுக்கு ’திருமணம் கடந்த உறவு’ என்ற புது விளக்கத்தை கொடுத்த சுப.வீரபாண்டியனை தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்து இருப்பது ஏன்? என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share