அமைச்சர் என்பதால் சலுகை அளிக்க முடியாது: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

மின்சாரத்துறை அமைச்சராக இருப்பதால் பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து செந்தில்பாலாஜிக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விலக்கு பெற்றுள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள இரு வழக்குகளும், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு இன்று(ஜூலை 27) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கும்படியும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்கமறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 6ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share