பாஸ்கர் செல்வராஜ்
இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியில் இருந்தாலும், இங்கிலாந்து அதிக பொருளாதார இழப்புகளைச் சந்தித்தது. இதில் மிகக் குறைவான இழப்பைச் சந்தித்த அமெரிக்கா அதுவரையிலும் உலகத் தலைமை வகித்த இங்கிலாந்திடம் அந்த இடத்தை மட்டுமல்ல; அந்நாட்டின் உலக நாணய அந்தஸ்தையும் பறித்து தன்னையும் தனது நாணயமான டாலரையும் அந்த இடத்தில் வைத்தது. இந்த கொரோனா தொற்றும் கிட்டத்தட்ட அதற்கு இணையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் இந்த ஒப்பீடு ஓரளவு ஏற்கத்தக்கதே. உயிர் – பொருளாதார இழப்பை பொறுத்தவரை இதுவரை அமெரிக்காவும் இந்தியாவும் அதிகம் சந்தித்து வருகின்றன.
இதுவரை ஆறு ட்ரில்லியனுக்கும் அதிகமாக சந்தையை நிலைப்படுத்தவும், நிறுவனங்களையும் மக்களையும் காக்கவும் அமெரிக்கா செலவு செய்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமாக உதவித்தொகை அளிக்க விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை இந்த போரில் பல பத்து பில்லியன் டாலர்களைக் கொண்டு இந்த போரில் குறைவான இழப்போடு தனது மக்களையும் பொருளாதாரத்தையும் மீட்டிருக்கிறது.
இந்த வருடம் ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்புள்ள ஒரே நாடு சீனா மட்டுமே. ஐரோப்பாவும் கிட்டத்தட்ட போராடி இயல்புநிலைக்குத் திரும்பி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலர் சீனாவுடன் வேறுபாடுகள் இருந்தாலும் அது தவிர்க்க இயலாத நாடு. நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவதன் மூலமே வேற்றுமைகளை களையமுடியும் என பேசி இருக்கிறார். அதோடு இரு பக்கத்தில் (அமெரிக்க – சீனா) ஒரு பக்கத்தை தெரிவு செய்ய அழுத்தம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் நலன் அடிப்படையிலும் யாரும் எங்களை கருவியாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியாமலும் செல்வதே எங்கள் தெரிவு என்கிறார். இது கொரானாவிற்கு பிறகு சீனா-ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து செயல்படும் என்பதையே காட்டுகிறது.
ஆசியாவிலும் பல்வேறு நாடுகள் இந்தத் தொற்றை திறம்பட சமாளித்து மேற்கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டன. இந்த வருடம் சீனா தனது 60 சதவிகித வர்த்தகத்தை ஆசிய நாடுகளுடனே மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான ஜப்பான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான Agisயை நிறுவுவதை கைவிட்டுள்ளது, இருதரப்பு உறவின் சருக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை அது எந்த சீன எதிர்ப்பு அரசியலிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தே வந்திருக்கிறது. கொரோனா போரில் வெற்றி பெற்ற சீனா, இரான் – பாகிஸ்தான் – மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து Silkroad மற்றும் Silk road of Health ஆகிய திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தும் வேலைகளில் முனைப்புக் காட்டி வருகிறது.
**இந்தியாவின் HDFC வங்கியின் ஒரு சதவிகித பங்குகளை சீன வங்கி வாங்க இருப்பதாகச் செய்திகள் வந்தது. உடனடியாக இந்திய அரசு அவ்வாறான கைப்பற்றல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதேநேரம் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை முகநூல் நிறுவனங்கள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.**
இன்று உலகின் மிக அதிக மதிப்புகொண்ட எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்சும் அதன் அதிபர் உலகின் ஐந்தாவது பெரும் பணக்காரராகவும் அந்த நிறுவனம் நிகர கடனற்ற நிறுவனமாகவும் மாறி இருக்கிறது. எந்த நாட்டு நிறுவனமானாலும் மற்ற நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது லாபமீட்டவே. அப்படியிருக்க ஏன் அமெரிக்க நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளமும் சீனாவுக்குத் தடையும் என்ற கேள்வி இங்கே எழாமல் இருக்கவியலாது.
இந்தியாவில் கல்வி, வேலை, வியாபாரம் என எதுவானாலும் அது இருக்கும் படிவரிசையையின் அடிப்படையிலேயே நடக்கும். சீன நிறுவனங்கள் தமது பொருட்களை நாட்டின் பெருநிறுவனங்களுடன் இணைந்து சந்தைப்படுத்தாமல் மற்றவர்களுடன் இணைந்தே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அது படிநிலையைக் கடந்து தமக்கு தோதான திறமை உள்ளவர்களுடன் இணைந்து செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கிறது, புதியவர்களை இந்த ஆட்டத்தில் கொண்டு வருவதாக இருக்கிறது. இந்த படிநிலையில் மாற்றம் ஏற்படுத்தும், கேள்விக்குட்படுத்தும் எந்த செயல்பாடும் இங்கே வெற்றிபெற அனுமதிக்கப் படுவதில்லை. சீனாவின் முதலீட்டுத் தோல்விக்கும் அமெரிக்க நிறுவனங்களின் வெற்றிக்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.
**இந்தியா மீளுமா?**
யார் முதலீட்டால் என்ன நம் வாழ்வு மேம்படுமா என்பதே நமது கவலை. இந்த சமீபத்திய முதலீடுகள் எல்லாம் நாட்டின் மின்னணு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மின் வர்த்தகம் மேலும் பெருகவும் உதவும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது. இவை இந்தியாவின் சேவைத் துறைக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். ஆனால் இந்த சேவைத் துறை சார்ந்த முதலீடுகள் எந்த அளவு வேலைவாய்ப்பை பெருக்கும் இந்தியப் பொருளாதாரத்தையும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்கும் என்பது விடை தெரியாத கேள்வி.
பொதுவாக உற்பத்தித் துறையும், உள்கட்டுமான துறைகளுமே பரவலான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டன. **ஜியோவின் சமீபத்திய முதலீட்டாளர்களின் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன்பேசிகளை உற்பத்தி செய்யும் என்று கூறி இருக்கிறார். அப்படியான உற்பத்தி நடவடிக்கைகள் வரவேற்க வேண்டிய ஒன்றே. ஆனால் நேரடியாக திறன்பேசி உற்பத்தியில் ஈடுபடுவது அதில் வெற்றி பெறுவதன் சாத்தியம் அது ஏற்படுத்தப்போகும் வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விகளுக்கு தற்போது எந்த பதிலும் இல்லை.
உள்கட்டமைப்பு துறையில் எந்த முதலீடுகளும் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. நாங்கள் அந்த துறையில் முதலீடுகளை ஈர்ப்போம் என்கிறார் அமைச்சர் கட்கரி. அது நடக்குமா என்பது தெரியாது. இந்தத் தொற்றினால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், இந்தியா எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனவும் இந்திய வங்கிகளின் வாராக்கடன் 15 சதவிகிதம் அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எந்த நாட்டின் உதவியும் இன்றி இந்திய அரசு கொரோனாவை வென்று இந்தியப் பொருளாதாரத்தை மீட்குமா?
அமெரிக்கா சீனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும். அந்த மோதலின் காரணமாக அங்கிருக்கும் நிறுவனங்கள் இங்கே வரும் அதன்மூலம் இந்திய உற்பத்தித் துறை எழுச்சி பெறும் என்பதே இந்தியாவின் கணிப்பு. கொரோனாவுக்கு எதிரான போரில் கடுமையாக சேதமடைந்திருக்கும் அமெரிக்கா தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமா? நலிவடைந்திருக்கும் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யுமா?
இதுவரை சீனாவில் வர்த்தகம் மேற்கொள்ளாத கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களே இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன. அதன்பொருள் அங்கிருக்கும் நிறுவனங்கள் மாபெரும் சீன சந்தையை இழக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. கொரோனா தொற்றை சரிவர கையாளாத அதிபர் ட்ரம்ப் எதிர்க்கட்சியின் பிடேனை விட 10 புள்ளிகள் வரை பின்தங்கி இருப்பதாக சமீபத்திய கருத்தாய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்த அதிபராக யார் வருவார்? அவர்களில் ஒருவர் வந்து சீனாவுடன் சமரசம் செய்து கொள்ளும்பட்சத்தில் இந்த ஆட்டத்தில் வெறும் பகடைக்காயாக இருந்து பெரும் இழப்பை சந்திக்குமா அல்லது வெற்றியாளராகுமா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்லும்.
**என்னவாகும் தமிழகம்?**
மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் நம் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் தன்மை கொண்டது. 90களுக்குப் பிறகான தமிழகம் எப்படி மாறி இருக்கிறது என்பதை வடமாநிலங்களை ஒப்பிட்டும் வடமாநில தொழிலாளர்களின் இடப்பெயர்வை வைத்தும் புரிந்துகொள்ளலாம். இந்த மாற்றங்கள் உலகமய உற்பத்தி சங்கிலியில் தன்னை இணைத்துக்கொண்டு அதிக மதிப்புமிக்க தொழில்களான வாகன உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொண்டது. தமிழகம் இதற்கு தோதாக முதலில் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் அதைத் தொடர்ந்து நாட்டிலேயே முதலாவதாக தொழில்நுட்பக் கல்லூரிகளையும் தோற்றுவித்தது. இதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். அதுமட்டுமல்ல, மட்டுபடுத்தப்பட்ட திறன்கொண்டவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் இன்ஜினீயரிங் பொருட்கள், தோல் மற்றும் ஆடை உற்பத்தியையும் ஊக்குவித்து தமிழகம் அதிக வருவாய் ஈட்ட வகை செய்தது. வருவாய்ப் பெருக பெருக மக்களின் வாங்கும்திறன் அதிகரித்து தமிழகம் வளர்ந்த மாநிலமானது. வாழ்க்கை மேம்பட மேம்பட மிக வேகமாக நகரமயமானது.
இதனாலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழகம் கொரோனா வந்தபிறகு அதிக இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. **ஒருநாளைக்கு ஒரு விவசாயக் கூலித் தொழிலாளர் ரூ.100 சம்பாதிக்கிறார் என்றால் மற்ற தொழிலில் ஈடுபடுபவர் அவரைப் போன்று ஐந்து மடங்கு சம்பாதிப்பார். இவரின் ஒருநாளைய இழப்பு அவருடன் ஒப்பிடும்போது மிக அதிகம். இதையே மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தினால் நமது இழப்புக்கும் மற்றவர்களின் இழப்புக்குமான வித்தியாசம் புரியும்**. இன்று கொரோனா முடக்கம் காரணமாக எல்லாம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்வும் வாழ்வாதார இழப்பும் நம்மை நிலைகுலைய வைத்திருக்கிறது. எப்போது இயல்புநிலைக்குத் திரும்புவோம் என்று ஏங்க வைத்திருக்கிறது. எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தை கொண்டுவந்திருக்கிறது.
சீனாவை கொரோனா தாக்கி வுஹான் நகரம் முடங்கியபோது அதைச் சார்ந்து உலகம் முழுவதும் இயங்கிய வாகன உற்பத்தி தடைபட்டது. இனிவரும் காலங்களில் அவ்வாறு நிகழாமல் இருக்க அந்த நிறுவனங்கள் மற்ற இடங்களிலும் உற்பத்தியைச் செய்ய முடிவு செய்து இந்தியாவுடன் பேசி வருகின்றன. இவை வரும்பட்சத்தில் ஏற்கனவே வாகன உற்பத்தி சங்கிலியைக்கொண்ட சென்னை பயன்பெறும் வாய்ப்பு அதிகம்.
ஆப்பிள் நிறுவனம் தனது iphone 11 சென்னையில் உள்ள பாக்ஸ்கான் மையத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதோடு அம்பானியின் 5G திறன்பேசி உற்பத்தி அறிவிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது சென்னை மேலும் பயன்பெறும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் வரவேற்கவே செய்வோம். இந்த சாத்தியங்கள் தவிர்த்து தற்போது இருக்கும் தொழில்கள் தொடருமா என்பதே கவலை. **தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே வேலைவாய்ப்பை வழங்கினாலும் அதிகமான வருவாய் வழங்கும் துறை மென்பொருள் சேவைத்துறை. இது 90 சதவிகிதம் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை நம்பியே இயங்கி வருகிறது. இன்று உலகமயம் பின்வாங்கி வருகிறது. அது தேசியமயமாகுமா, பிராந்தியமயமாகுமா அல்லது சீனாவின் தலைமையில் உலகமயமாக்கம் 2.0 ஆக மலருமா** என்று தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதில் எது நடந்தாலும் இந்நிறுவனங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பே அதிகம். முதல் இரண்டும், பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளின் சந்தையையும் தற்போதுபோல சென்றடைய இயலாத நிலையை ஏற்படுத்தும். இந்தியாவின் அமெரிக்க சார்பு காரணமாக பின்னதில் பங்கேற்க இயலாது. அமெரிக்க மக்களின் வாங்கும்திறன் நிச்சயம் பழைய நிலைக்குத் திரும்பும் சாத்தியம் இல்லை. அவர்களுக்கு ஏற்றுமதி வாகனம், தோல், ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வளரும் வாய்ப்பு இல்லாமல் போகாது. ஆனால் பெரிய அளவில் அதில் வளர்ச்சி இருக்காது. மருந்து, ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வரும் மூலப்பொருட்களை நம்பியே இருக்கின்றன. இந்தியா சீனாவுடன் போதல் போக்கைக் கடைப்பிடிக்கும்பட்சத்தில் இவை பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அடுத்த பத்தாண்டுகளுக்கு இவை எல்லாம் பெரிய மாற்றத்தைக் கண்டுவிடாது என்றாலும், எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்கள் இவற்றை எல்லாம் மாற்றி அமைக்கப் போவது உறுதி. முன்பு உலகமயமாக்கம் நடந்தபோது தமிழகம் தன்னை அதற்காக தகவமைத்துக்கொண்டு தயாராக இருந்ததாலேயே இந்த மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டது.
இன்று உலகம் அடுத்த மின்னணு தொழில்நுட்பப் பொருளாதாரத்துக்கு (Digital Economy) நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழகம் அதற்கான அடிப்படைகளை உருவாக்கிக்கொண்டு அதனோடு இணைந்து பயணிக்க தயார் செய்யப்பட்டிருக்கிறதா? முன்பு உலகமயமாக்கம் 1.0ல் பங்கேற்று பலனடைந்ததை போல 2.0லும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமா?
**இன்றைய நமது அவசர தேவை ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கொடுக்கும் வெறும் மின்னணுமயமாக்கம், சேவைத்துறை வளர்ச்சி மட்டுமே அல்ல. மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கும் உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறை வளர்ச்சி. எதிர்காலத்தில் நமக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் கொள்கை முடிவுகள்.** உலகம் செல்லும் திசையில் ஒருங்கிணைந்து செல்லும் வாய்ப்பு. இவை எல்லாம் நடக்கவில்லை என்றால், நாம் நிச்சயம் அழிந்து போக மாட்டோம். இங்கு வேலை இழப்பவர்களும், மத்திய கிழக்கில் வேலை இன்றி திரும்பி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் விவசாயம் புகலிடம் அளிக்கும். வெந்ததைத் தின்று உயிர் வாழ்ந்திட முடியும்.
ஆனால், இப்போது இருக்கும் வாழ்க்கைத் தரம் சாத்தியம் இல்லை. இந்தியா எப்போதும் சார்புத்தன்மையைக் கடைப்பிடித்ததில்லை. யாரும் தன்னை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததில்லை. **இந்தியா எல்லோருக்கும் முக்கியமான சந்தை. இந்தியாவுக்கும் எல்லோரின் உறவும் முதலீடும் தேவை. இனிவரும் காலங்களில் இந்தியா வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திசையில் தமது கொள்கை முடிவுகளை எடுக்கும் நாமும் வளமான வாழ்வை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்** என்று நம்புவோம்.
(நிறைவு)
**கட்டுரையாளர் குறிப்பு**
பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும், அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
[பகுதி 1](https://minnambalam.com/politics/2020/08/12/8/india-mulipolar-world-relationship-exterenal-affairs )
[பகுதி 2](https://minnambalam.com/public/2020/08/11/17/global-indian-south-indian-tamilnadu-developments-what-happened)
�,”